Published : 26 Mar 2022 01:33 PM
Last Updated : 26 Mar 2022 01:33 PM

புலியூர் பேரூராட்சி தலைவர் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு: திமுக மீது இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சரமாரி குற்றச்சாட்டு

கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பதவி வேட்பாளர் 1வது வார்டு உறுப்பினர் க.கலாராணி

கரூர்: முன்மொழிய போதிய வார்டு உறுப்பினர்கள் வராததால் கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், திமுகவினர் அசிங்கப்படுத்திவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் வேட்பாளர் கலாராணி குற்றஞ்சாட்டியுள்ளார்

கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி தலைவர் பதவி பட்டியலின பெண் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. புலியூர் பேரூராட்சி 8வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் அடைக்கப்பன் போட்டியின்றி தேர்வான நிலையில் 14 வார்டுகளுக்கு கடந்த பிப். 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இதில் திமுக 12 இடங்களிலும், 1வது வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கலாராணி, 4வது வார்டில் பாஜக வேட்பாளர் விஜயகுமார் ஆகியோர் வெற்றி பெற்றனர். திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலைவர் பதவி ஒதுக்கப்பட்டதால் திமுகவினர் அதிருப்தியடைந்தனர். புலியூர் பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த 4 ஆம் தேதி தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேரூராட்சி தலைவர் பதவி வேட்பாளர் கலாராணி வந்திருந்த நிலையில் திமுகவினர் அவரது பெயரை முன்மொழியாமல் திமுகவைச் சேர்ந்த 3வது வார்டு உறுப்பினர் புவனேஸ்வரியை தலைவராக முன்மொழிந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் க ட்சி பேரூராட்சி தலைவர் வேட்பாளரான கலாராணி உள்ளிட்ட வேறு யாரும் தலைவர் பதவிக்கு போட்டியிடாததால் புவனேஸ்வரி போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர்கள் பதவியை ராஜினாமா செய்ய கட்சி தலைமை வலியுறுத்தியதை அடுத்து கடந்த 8 ஆம் தேதி தலைவர் பதவியை புவனேஸ்வரி ராஜினாமா செய்தார். இதையடுத்து தமிழக அளவில் காலியாக உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று (மார்ச் 26ம் தேதி) காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.

இதில் புலியூர் பேரூராட்சி கூட்டரங்கில் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தேர்தலையொட்டி பசுபதிபாளையம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்தல் நடத்தும் அலுவலர் லோகநாதன், வட்டார தேர்தல் மேற்பார்வையாளர்
தமிழ்ச்செல்வி தயாராக இருந்த நிலையில் பாஜகவைச் சேர்ந்த வார்டு உறுப்பினர் விஜயகுமார் மட்டுமே வந்திருந்தார். அதன்பிற்கு துணைத் தலைவரும், திமுக பேரூர் செயலாளருமான அம்மையப்பன் வந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் வேட்பாளர் கலாராணி வந்தார்.

கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி துணைத்தலைவரும், திமுக பேரூர் செயலாளருமான கா.அம்மையப்பன்

வேட்பு மனுவை வாங்கிய கலாராணி அதனை நிரப்பாமல் இருந்தார். அதன் பிறகு பேரூராட்சி அலுவலர் நிரப்ப சொல்லிக் கொடுத்ததை அடுத்து வேட்பு மனுவை நிரப்பினார். அவரை யாரும் முன்மொழியாததாலும், வழிமொழியாததாலும் வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை. மேலும் காலை 10 மணி வரை துணைத் தலைவர் உள்ளிட்ட 3 பேர் மட்டுமே வந்திருந்ததாலும் தேர்தல் நடத்தும் அலுவலர் 10 நிமிட கூடுதல் அவகாசம் (கிரேஸ் பீரியடு) வழங்கியும் (தேர்வு செய்வதற்கான) 8 உறுப்பினர்கள் கூட வருகை தராததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து துணைத் தலைவர் அம்மையப்பன், பாஜக வார்டு உறுப்பினர் விஜயகுமார் கூட்ட அரங்ககை விட்டு வெளியேறினர்.

இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளர் கலாராணி கூறியதாவது: "திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கடந்த 4 ஆம் தேதி நடந்த தேர்தலில் திமுக வார்டு உறுப்பினர் புவனேஸ்வரியை நிறுத்தி வெற்றிப் பெற வைத்து கட்சியையும், என்னையும் அசிங்கப்படுத்தினர். தற்போது மீண்டும் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில் திமுக வார்டு உறுப்பினர்கள் 11 பேரும் துணைத் தலைவர் அம்மையப்பன் வீட்டுக்கு சென்ற நிலையில் அவர்களை அங்கேயே விட்டு விட்டு அவர் மட்டுமே வந்தார்.

திமுக உறுப்பினர்களை நில் என்றால் நில், உட்கார் என்றால் உட்கார் என்ற நிலையில் அடிமைகளாக வைத்துள்ளார். வேட்பு மனுவை நிரப்பிய நிலையில் யாரும் முன்மொழிய, வழிமொழிய இல்லாததால் வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை. போதிய வார்டு உறுப்பினர்கள் வராததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 2வது முறையாக கட்சியையும், என்னையும் அசிங்கப்படுத்தி உள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு புலியூர் பேரூராட்சி தலைவர் பதவி வேண்டும். கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்" என்று கலாராணி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x