Published : 26 Mar 2022 10:35 AM
Last Updated : 26 Mar 2022 10:35 AM
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் நள்ளிரவில் சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த எலக்ட்ரிக் வாகன பேட்டரியில் இருந்து வெளியேறிய புகையால் தந்தை, மகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
வேலூர் சின்ன அல்லாபுரத்தைச் சேர்ந்தவர் துரைவர்மா (49). போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர். இவருக்கு இந்திரா என்ற மனைவியும், மோகன பிரீத்தி என்ற 13 வயது மகளும், அவினாஷ் என்ற 10 வயது மகனும் உள்ளனர். இந்திரா சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததால் மகள், மகனுடன் துரைவர்மா சிறிய வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இரு தினங்களுக்கு முன்பு புதிதாக பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனத்தை துரைவர்மா வாங்கியுள்ளார். இந்த வாகனத்தை நேற்று இரவு 10 அடி அகலம் 10 அடி நீளம் கொண்ட தனது சிறிய விட்டின் அறையில் நிறுத்தி சார்ஜ் ஏற்றியுள்ளார். இரவில் வாகனத்துக்கு அருகில் இருந்த படுக்கையில் தந்தையும், மகளும் படுத்துறங்க, மகன் அவினாஷ் மட்டும் பக்கத்து வீட்டில் வசிக்கும் அத்தையுடன் உறங்கச் சென்றார்.
நள்ளிரவு ஒரு மணியளவில் பேட்டரியில் திடீரென புகை குபு குபுவென கிளம்பியுள்ளது. சிறிய வீட்டின் வாசல் பகுதியில் இருசக்கர வாகனம் இருந்ததால் இருவரும் கதவை திறந்துகொண்டு உடனடியாக வெளியேற முடியவில்லை. பின்னர், அந்த சிறிய அறையின் ஒரு பகுதியில் இருந்த குளியல் அறையில் மகளுடன் சென்ற துரைவர்மா கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம், பக்கம் இருந்தவர்கள் ஓடிச்சென்று கதவை உடைத்துள்ளனர்.
அதற்குள் இருசக்கர வாகனம் எரிய ஆரம்பித்தது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் தீப்பிடித்து எரிந்த வாகனத்தை வெளியே இழுத்துப் போட்டுள்ளனர். உள்ளே சென்று பார்த்த போது குளியல் அறையில் தந்தையும் மகளும் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி நிலையில், அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்ததாக கூறியுள்ளனர். இது தொடர்பாக பாகயம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மின்சார வாகனத்தின் பேட்டரி சார்ஜ் ஏற்றப்படும் போது அதிகப்படியான உஷ்ணத்தால் புகை வெளியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. பேட்டரியில் இருந்து வெளியேறியே புகையால் தந்தை, மகள் உயிரிழந்து இருக்கும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT