Published : 26 Mar 2022 09:07 AM
Last Updated : 26 Mar 2022 09:07 AM

அரசின் வருவாயை பெருக்கும் வகையில் கிரானைட், கல் குவாரிகளை ஏலம் விடவேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தல்

சென்னை

தருமபுரி, கிருஷ்ணகிரியில் உள்ள கிரானைட் குவாரிகள், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கல் குவாரிகளை பொது ஏலத்துக்கு கொண்டு வந்து அரசின் வருவாயை பெருக்க வேண்டும் என்று கனிம வளத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக புவியியல், சுரங்கத் துறை, தமிழ்நாடு கனிம நிறுவனம், தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ஆகியவற்றின் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இதில் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:

புவியியல், சுரங்கத் துறையை மேம்படுத்தும் நோக்கில் அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டித் தர அனைத்து அலுவலர்களும் முழுஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும். மாவட்ட, மண்டல பறக்கும் படை அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

சட்ட விரோதமாக கனிமங்களை வெட்டி எடுப்பது குறித்து பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதுடன், அப்பகுதிகளை கள ஆய்வு செய்து,தேவைப்பட்டால் ஆளில்லா விமான தொழில்நுட்பம் மூலம் அளவீடு செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள தகுதி வாய்ந்த கிரானைட் குவாரிகள், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தகுதி வாய்ந்த கல் குவாரிகளை உடனடியாக ஏலத்துக்கு கொண்டுவர வேண்டும்.

இந்த நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை ரூ.1,024 கோடி கனிம வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. வரும் மாதங்களில் அதிக வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்டுமானப் பொருட்கள் விலை

மாவட்ட கனிம கட்டமைப்பு விதிகளின் கீழ் கனிம கட்டமைப்பு நிதியைக் கொண்டு மக்கள் நலத் திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும். மக்களுக்கு கட்டுமானப் பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

அனைத்து மாவட்ட அலுவலர்களும் மாதத்துக்கு குறைந்தபட்சம் கனிமம் கடத்தும் 20 வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். அண்டை மாநிலங்களுக்கு வாகனங்களில் மணல் கடத்தப்படுவதை முழுமையாக தடுக்க வேண்டும். மண்டல பறக்கும் படையினர் முனைப்புடன் செயல்பட்டு அதிகஅளவில் வாகனங்களை பறிமுதல் செய்து, கனிம திருட்டை முற்றிலும் தடுத்து அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x