Published : 26 Mar 2022 06:19 AM
Last Updated : 26 Mar 2022 06:19 AM
கோவை: கோவை ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இருவர், 2 குறுங்கோள்களை கண்டறிந்துள்ளனர். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி நாசா பாராட்டு தெரிவித்துள்ளது.
திருச்சி வானவியல் மன்றம், ஸ்பேஸ் ஜெனரேஷன் இந்தியா, சிக்ரு கோ லாப் பெங்களூரு சார்பில் குறுங்கோள்களை (அஸ்டிராய்டு) கண்டறிவது குறித்த பயிற்சியில் சேர கடந்தாண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, கோவை வானவியல் மன்றம் மூலம் ஒத்தக்கால்மண்டபம் அரசுமேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள் பி.பிரமீஷா, ர.ஸ்வேதா ஆகியோர் பங்கேற்றனர்.அவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூலைமுதல் டிசம்பர் வரை ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டதால், கடந்த ஜனவரி 28 முதல்பிப்ரவரி 22-ம் தேதி வரை ஹவாய்பல்கலைக்கழகத்தின் ஆஸ்ட்ரோ மெட்ரிகா என்ற மென்பொருள் உதவியுடன் குறுங்கோள்களை கண்டறியும் நிகழ்வில் பங்கேற்க இருவரும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதேபோன்று உலகம் முழுவதும் 351 குழுக்கள் பங்கேற்றன. இந்தியாவில் இருந்து 121 குழுக்கள் பங்கேற்றதில், தமிழகத்தில் 10 குழுக்கள் கலந்து கொண்டன. அதில் ஒரு குழுவாக கலந்துகொண்ட இருவரும் இணைந்து 2 குறுங்கோள்களை கண்டறிந்துள்ள னர். அவர்களின் இந்த பங்களிப்பைபாராட்டி நாசா, ஐஏஎஸ்சி இணைந்து சான்று வழங்கியுள்ளன.
இதுதொடர்பாக தற்போது 10-ம்வகுப்பு பயிலும் மாணவிகள் பி.பிரமீஷா, ர.ஸ்வேதா ஆகியோர் கூறியதாவது: வானில் உள்ள குறுங்கோள்களை கண்டறிய ஹவாய்தீவில் இரண்டு பெரிய தொலைநோக்கிகள் கட்டமைக்கப்பட்டுள் ளன. அவற்றின் மூலம் கிடைக்கும் படங்களை ஐஏஎஸ்சி, நாசா ஆகியவை மின்னஞ்சல் மூலம் எங்களுக்கு அனுப்பிவைத்தனர். பின்னர்,மென்பொருள் உதவியுடன் அந்தபடத்தில் நகரும் பொருள் ஏதேனும்உள்ளதா என்பதை கண்டறிந்து, அறிக்கை தயாரித்து அனுப்பினோம். அவர்கள் ஒப்பிட்டு பார்த்துகுறுங்கோள்களை கண்டறிந் ததற்காக எங்களுக்கு தற்காலிக அங்கீகார சான்று அளித்துள்ளனர். எங்களின் முயற்சிக்கு தலைமையாசிரியர் ரமேஷ், அறிவியல் ஆசிரியர் சாய்லட்சுமி உள்ளிட்டோர் உறுதுணையாக இருந்தனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பெயர் வைக்க அனுமதி
திருச்சி வானவியல் மன்றத்தின் தலைவர் பாலாபாரதி கூறும்போது, “அஸ்டிராய்டுகள் என்பவை சிறிய பாறை போன்ற பொருட்கள் ஆகும்.அவை செவ்வாய், வியாழன் ஆகியகோள்களுக்கு இடையே அதிகம்உள்ளன. இந்த கோள்களுக்கு இடையே சுற்றி வரும் நிறையபொருட்களில் 2 குறுங்கோள்களை மாணவிகள் கண்டறிந்து தெரிவித் துள்ளனர். அஸ்டிராய்டுகளும் மற்ற கோள்களைப் போலவே சூரியனை சுற்றி வருகின்றன.
நாசா தகவல்படி அஸ்டிராய்டுகளில் பெரியது 530 கிலோ மீட்டர் விட்டம் உடையதாகவும், சிறியதன் சராசரி விட்டம் 33 அடி கொண்டதாகவும் உள்ளது. இதுவரை, 11.13 லட்சம்அஸ்டிராய்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது மாணவிகள்கண்டறிந்துள்ளது ஆரம்ப நிலை கண்டுபிடிப்பு. இவற்றுக்கு தற்காலிகப் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த குறுங்கோள் களின் சுற்றுவட்டப்பாதை உட்பட மற்ற பண்புகள் ஆராயப்பட்டு அதற்கு நிரந்தரப் பெயர் வைக்கும் போது இவர்கள் பரிந்துரைக்கும் பெயர்களை வைப்பார்கள்" என்றார்.
பூமிக்கு ஆபத்தை விளைவிக்கலாம்
செவ்வாய், வியாழன் ஆகிய கோள்களுக்கு இடையே மட்டுமின்றி பூமிக்கு அருகிலும் பெரியதும், சிறியதுமாக நிறைய அஸ்டிராய்டுகள் சுற்றி வருகின்றன. பூமிக்கு ஆபத்தை விளைக்கும் பொருட்களில் இவை முக்கியமானவை. இவை பூமி அருகே வரும்போது பெரும்பாலும் எரிந்துவிடுகின்றன. ஒருவேளை பூமி மீது அவை மோதினால் சேதம் ஏற்படும். எனவே, அவற்றைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. ஆயிரக்கணக்கில் அஸ்டிராய்டுகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் இன்னும் கண்டுபிடிக்க வேண்டியவை நிறைய உள்ளதாக பாலாபாரதி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT