Published : 18 Apr 2016 02:21 PM
Last Updated : 18 Apr 2016 02:21 PM
நாகர்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் பிரதான கட்சிகளின் சார்பில் முக்கிய பிரமுகர்கள் களம் இறக்கப்பட்டுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இத்தொகுதியில் இப்போதைய நிலையில் யார் வெற்றி பெறுவார் என்பதை மட்டுமின்றி, யார் முந்திச் செல்கிறார் என்பதைக் கூட கணிக்க முடியாத நிலை உள்ளது.
நாகர்கோவில் தொகுதியில் பெரும்பான்மை இடங்கள் நகரப் பகுதிகளாகவும், சில இடங்கள் மட்டும் கிராம ஊராட்சிகளாகவும் உள்ளன. இத்தொகுதியை பொறுத்தவரை அனைத்து சமுதாயத்தினரும் உள்ளனர். தொகுதி மறுசீரமைப்புக்கு பின்பு இந்து நாடார் சமூகம் சற்று கூடுதலாக உள்ளது.
வலுவான வேட்பாளர்கள்
இத்தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான எம்.ஆர்.காந்தி களத்தில் உள்ளார். இவருக்கு தொகுதிக்குள் நல்ல பெயர் உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபயிற்சி சென்ற எம்.ஆர்.காந்தியை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி தாக்கியது. இதில் தலையில் பலத்த காயமடைந்தார் எம்.ஆர்.காந்தி. இச்சம்பவத்தைக் கண்டித்து மாவட்டம் முழுவதும் பந்த் நடத்தியது பாஜக. அந்த அளவுக்கு பாஜகவால் மதிக்கப்படும் நபராக எம்.ஆர்.காந்தி உள்ளார்.
இத்தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் போட்டியிடுகிறார். இவர் கடந்த நான்கு முறை கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டார். இந்த முறை தனது முகாமை நாகர்கோவிலுக்கு மாற்றியுள்ளார். 10 ஆண்டுகள் அமைச்சராகவும் இருந்தவர் என்பதால் தொகுதியில் கூடுதல் கவனத்தை ஈர்த்து வருகிறார். தொகுதிக்குள் இருக்கும் சிறுபான்மை மக்களின் வாக்குகள் தனக்கு கைகொடுக்கும் என நினைக்கிறார்.
நாகர்கோவில் தொகுதியில் அதிமுகவில் சிட்டிங் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் களத்தில் உள்ளார். முதலில் டாரதி சேம்சன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், நாஞ்சில் முருகேசன் சோர்வடைந்தார்.
பின்னர், வேட்பாளராக தன்னை கட்சித் தலைமை அறிவித்ததைத் தொடர்ந்து, கிடைத்த வாய்ப்பை தக்கவைக்க வேண்டும் என்ற வேகத்தோடு நாஞ்சில் முருகேசன் களப்பணியாற்றி வருகிறார்.
மதிமுக சார்பில் ஓய்வு பெற்ற ஆசிரியை ராணி செல்வின் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக கட்சிகளின் சார்பில் இந்து வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ள நிலையில், மதிமுக சார்பில் கிறிஸ்தவ வேட்பாளர் களம் காண்கிறார்.
மற்ற கட்சிகளுக்கு ராணி செல்வின் நெருக்கடியை கொடுப்பார் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
நான்கு முக்கிய கட்சிகளும் வலுவான வேட்பாளர்களை களம் இறக்கியதால், நாகர்கோவில் தேர்தல் களம் களைகட்டியுள்ளது. யாருக்கு வெற்றிக்கனி கிடைக்கும் என்பது நாகர்கோவில் தொகுதி மக்கள் எடுக்கும் முடிவில்தான் இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT