Published : 25 Mar 2022 06:35 PM
Last Updated : 25 Mar 2022 06:35 PM
புதுச்சேரி: "சொகுசு பஸ் வாங்கியதில் பல கோடி ஊழல் உள்பட புதுவை பிஆர்டிசி போக்குவரத்து நிறுவனத்தில் முறைகேடு செய்து வரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தொடர் போராட்டம் நடத்தவுள்ளோம்” என்று பிஆர்டிசி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கவுரவத் தலைவர் பாலமோகனன் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "புதுவையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வரும் பிஆர்டிசி அரசுப் போக்குவரத்து நிறுவனத்தில் செயலராக பணியாற்றி வரும் கிஷோர்குமாரின் ஊழல் மிகுந்த நிர்வாகத்தால், அந்த நிறுவனம் நஷ்டமடைந்து வருகிறது. இதுகுறித்து, விசாரிக்க புதுவை அரசு கடந்த 2017-ம் ஆண்டில் ஐஏஎஸ் அதிகாரி விஜயன் தலைமையில் குழுவை அமைத்தது. அந்தக் குழு விசாரித்து, முறைகேடு நடந்துள்ளதை சுட்டிக் காட்டியது. 40 சொகுசு பேருந்துகள் வாங்கியதில் ரூ.27 கோடி அளவில் நஷ்டம் ஏற்படுத்தியிருப்பதால், அது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பரிந்துரை செய்தது.
ஆனால், மூன்று ஆண்டுகள் கடந்தும் அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோல், துணை மேலாளர் குழந்தைவேல் மற்றும் 18 ஊழியர்கள் முறைகேடு செய்ததால், பணிநீக்கம் செய்யப்பட்டனர். மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும், அவர்கள் மீது விசாரணை நடத்தாத நிர்வாகம், அவர்கள் வேலை செய்ததாக முன்தேதியிட்டு சம்பளம் வழங்கி நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் விஜயன் கமிட்டி தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், மூன்று ஆண்டுகளாகியும் அதிகாரி கிஷோர்குமார் மீது நடவடிக்கை இல்லை. மேலாண் இயக்குநருக்கும் தெரியாமல், சட்டவிரோதமாக 20-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு, கிஷோர்குமார் சம்பளம் உயர்வு வழங்கியுள்ளார். இதுபோல், பல்வேறு முறைகேடுகள் செய்து, பிஆர்டிசி நிர்வாகத்துக்கு அவர் இழப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில், அதிகாரி கிஷோர்குமார் அடுத்த மாதம் 30-ம் தேதி ஓய்வு பெற உள்ளதால், இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து, அவரை பணி நீக்கம் செய்ய வேண்டுமென பிஆர்டிசி ஊழியர் சங்கம் சார்பில், வழக்கறிஞர் மூலம் அரசின் போக்குவரத்து செயலர், பிஆர்டிசி மேலாண் இயக்குநர் ஆகியோருக்கு கடந்த மாதம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஒரு மாத காலமாகியும், நடவடிக்கை எடுக்காமல் உள்ளதால், இந்த முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தொடர் போராட்டம் நடத்துவதாக, தற்போது பிஆர்டிசி ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது” என்று குறிப்பிட்டார்.
பிஆர்டிசி ஊழியர் சங்க நிர்வாகிகள் பத்மநாபன், வேலைய்யன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT