Published : 25 Mar 2022 05:01 PM
Last Updated : 25 Mar 2022 05:01 PM

60 கி.மீ.-க்குள் அகற்றப்பட வேண்டிய தமிழக சுங்கச் சாவடிகளின் பட்டியல் தயாராகிறது: அமைச்சர் எ.வ.வேலு

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு | கோப்புப் படம்

மதுரை: "மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதன் அடிப்படையில் 60 கி.மீ. தொலைவிற்குள் இருக்கும் அகற்றப்பட வேண்டிய தமிழக சுங்கச்சாவடிகள் பட்டியல் கேட்டுள்ளோம்" என்று பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியது: "பொதுப் பணித்துறையை பொறுத்தவரையில் ஆட்சி மாற்றங்கள் நடந்தாலும் அந்தத் துறை கட்டும் கட்டிடங்கள் எப்போதுமே தரமாக இருக்கிறது. இருக்கிற துறைகளில் பொதுப்பணித்துறை ஓர் உறுதியான துறையாக கருதப்படுகிறது. ஏனென்றால், இந்த துறை பிரிட்டிஷ் காலத்தில் தொடங்கப்பட்டது. 160 ஆண்டு கால பாரம்பரியத்தைக் கொண்ட துறையாக திகழ்கிறது. அதனால், இந்த துறை கட்டும் கட்டிடங்கள் தரமானது. இந்தக் கட்டிடங்களை மூன்று ஆண்டு காலம், ஐந்து ஆண்டு காலம் பராமரிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

தமிழக அரசு ஆண்டிற்கு ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் வட்டி கட்டும் சூழ்நிலை இருப்பதால் நிதிப் பற்றாக்குறை இருப்பதாக நிதியமைச்சர் கூறியிருக்கிறார். இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் நெடுங்காலமாக பராமரிக்கப்படாமல் இருந்த கட்டிடங்களை பெயின்டிங் அடிப்பது, சிதலமடைந்த கட்டிடங்களை சீரமைத்து பராமரிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதனால், தமிழகம் முழுவதும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பராமரிக்க வேண்டிய பொதுப்பணித் துறை கட்டிடங்கள் பட்டியலை கேட்டுள்ளோம்.

பழனி - கொடைக்கானல் சாலை அமைக்கும் திட்டம் இருக்கிறது. அதற்கான திட்ட விரிவு அறிக்கை தயாரிக்க சொல்லி இருக்கிறோம். இந்த அறிக்கை வந்த பிறகு முதல்வர் ஒப்புதல் பெற்ற பிறகுதான் நிதி ஒதுக்கி டெண்டர் விடப்படும். பழனி - கொடைக்கானல் சாலையை பொறுத்தவரையில் முதல் கட்டத்தில்தான் (திட்ட அறிக்கை தயாரிப்பு) இருக்கிறோம்.

நான்கு வழிச் சாலைகளை பொறுத்தவரையில் நகராட்சிக்குள் 10 கி.மீ, மாநகராட்சிக்குள் 10 கி.மீ, தொலைவிற்குள் இருக்கும் சுங்கச்சாவடிகளை எடுக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. அந்த அடிப்படையில் சென்னையில் 5 சுங்கச்சாவடிகள் உள்ளன. மதுரை, திருச்சியில் இருந்து சென்றாலும் இந்த சுங்கச்சாவடிகளை கடந்துதான் செல்ல வேண்டும். அதனால், முன்னுரிமை கொடுத்து இந்த சுங்கச்சாவடிகளை எடுக்க வேண்டும் என்று கடந்த 6 மாதத்திற்கு முன் நிதின் கட்கரியிடமும் மனு கொடுத்தோம். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பும் டெல்லி சென்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் நினைவூட்டல் கடிதம் கொடுத்தோம்.

நாங்கள் கடிதம் கொடுத்ததின் உந்து சக்திதான் நிதின் கட்கரி மக்களவையில் 60 கி.மீ, தொலைவிற்குள் இருக்கும் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என அறிவித்துள்ளார். தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்தின் மதுரை, சென்னை இயக்குநர்களை அழைத்து தமிழகத்தில் மத்திய அமைச்சர் கூறிய அடிப்படையின் கீழ் 60 கி.மீ, தொலைவிற்குள் இருக்கும் அகற்றப்பட வேண்டிய தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகள் பட்டியலை கேட்டுள்ளோம்.

அந்தப் பட்டியல் வந்ததும் நிதின் கட்கரியிடம் கொடுக்க வசதியாக இருக்கும் என்று கூறியுள்ளோம். அந்தப் பட்டியல் வந்ததும் மீண்டும் கடிதம் எழுதி வலியுறுத்துவோம்" என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x