Published : 25 Mar 2022 04:31 PM
Last Updated : 25 Mar 2022 04:31 PM
சென்னை: பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் இழிவாக பதிவிட்டது தொடர்பான வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இருந்தபோது பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவமதிக்கப்பட்டது தொடர்பாக ஆளுநர் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் பற்றி சமூக வலைதளங்களில் பரவிய தகவலை, பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார்.
இதுதொடர்பாக சென்னை காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகாரில், எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்.வி.சேகர் தரப்பில் சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த பதிவுகள் நீக்கப்பட்டு, மன்னிப்பும் கேட்கபட்டது. நீதிமன்றத்திலும் மற்றொரு முறை மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாவும் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள நபர் ஒருவரின் கருத்தையே மனுதாரர் பகிர்ந்ததாகவும் அதற்காக உடனடியாக மன்னிப்பும் கேட்கப்பட்டது. எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக ஒரு முறைகூட எஸ்.வி.சேகர் விசாரணைக்காக ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், எஸ்.வி.சேகர் வரும் ஏப்ரல் 2-ம் தேதி மத்திய குற்றப் பிரிவு காவல்துறை முன்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். அப்போது, பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி முகநூலில் எழுதிய அமெரிக்க வாழ் தமிழர் குறித்த அனைத்து தகவல்களையும் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு தள்ளிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT