Published : 25 Mar 2022 04:28 PM
Last Updated : 25 Mar 2022 04:28 PM

என்எல்சி-யின் 300 காலிப் பணியிடங்களில் 90%-ஐ தமிழக இளைஞர்களுக்கு வழங்க வேண்டும்: வேல்முருகன்

சென்னை: "என்எல்சி பணிக்கான தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் அமைக்க முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கடந்த 1950-களில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மற்றும் சுரங்கங்கள் அமைப்பதற்காக நெய்வேலி, கெங்கைகொண்டான் உள்ளிட்ட 23 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளையும், வாழ்வாதாரமாக திகழ்ந்த நிலங்களையும் கொடுத்து விட்டு ஆதரவற்றவர்களாக அங்கிருந்து வெளியேறினர். அதன்பின்னர் 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் அவ்வாறு ஈகம் செய்த மக்களின் குடும்பங்களுக்கு நியாயமான இழப்பீடும், வேலைவாய்ப்பும் இதுவரை வழங்கப்படவில்லை.

அதற்கு பதிலாக, தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் வழங்கிய நிலத்தில் இயங்கும் என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்களையோ, அந்நிறுவனப் பணியிலிருந்து இறந்தோரின் வாரிசுகளையோ முற்றிலும் புறக்கணித்துவிட்டு, இந்திக்காரர்களையும் வடநாட்டுக்காரர்களையும், நிரந்தரப் பணிகளில் சேர்ப்பதை வழக்கமாக மோடி அரசு கொண்டுள்ளது. என்.எல்.சி நிறுவனத்தில் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிப்பதை சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கும், நிலங்களை கொடுத்த கிராம மக்களுக்கும் மட்டுமே, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து போராடி வருவதோடு, பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.

இச்சூழலில், நெய்வேலி நிலக்கரிப் பழுப்பு நிறுவனம், பட்டதாரிப் பொறியாளர்களுக்கு, இயந்திரவியல், மின்துறை, புவியியல், சுரங்கத்துறை, கணினி, போன்ற துறைகளுக்கான 300 பணிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. அதில், மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு வரும் 28.03.2022 முதல் 11.04.2022 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்களுக்கு இந்தியா முழுவதும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் சுமார் 75 இலட்சத்திற்கு மேற்பட்ட இளைஞர்கள் பதிவு செய்து விட்டு வேலைக்காக காத்திருக்கும் நிலையில், 300 காலிப்பணியிடங்களுக்கு நாடு முழுவதும் விண்ணப்பிக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு மேலாக, நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கும், இறந்தோரின் வாரிசுகளுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்காமல் இருப்பது மாபெரும் அநீதி. என்.எல்.சி அமைவதற்காக தியாகம் செய்த உள்ளூர் மக்களுக்கு நிர்வாகம் துரோகம் இழைப்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி பார்த்துக்கொண்டிருக்காது.

எனவே, என்.எல்.சி நிறுவனத்தில் அறிவிக்கப்பட்ட 300 காலிப்பணியிடங்களுக்கு, தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்களுக்கே 90 விழுக்காடு முன்னுரிமை வழங்க வேண்டும். இது தொடர்பாக உடனடியாக ஒன்றிய அரசுடன் பேசி தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்களை அமைத்து அந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்திட தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது'' இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x