Published : 25 Mar 2022 03:06 PM
Last Updated : 25 Mar 2022 03:06 PM
மதுரை: 'போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை ஆதரிக்கிறோம். எனினும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று போக்குவரத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், " பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அரசு போக்குவரத்து கழகத்தில் எந்தவித பாதிப்பும் வராது, இதற்காக 22 ரூபாய் வரை மானிய விலையில் டீசல் நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது. நாங்கள் எதிர்பார்த்ததை விட பெண்கள் 40 சதவீதத்திலிருந்து 62 சதவீதம் வரை கூடுதலாக பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.
உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் அதிக வாக்குகள் அளித்துள்ளனர். விலையில்லா பயணம் பெண்களிடம் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது என்பது தெரிய வருகிறது. அரசு 1,510 கோடியிலிருந்து 1,900 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
பேருந்து படியில் தொங்கியபடி பயணிப்பதால் ஏற்படும் ஆபத்து குறித்து மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆர்டிஓ அலுவலர்கள், போலீஸார் மூலம் மாணவர்களுக்கு போதிய அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. சில மாணவர்கள் சில இடங்களில் பிரச்சினை செய்கின்றனர். அவர்களை ஒழுங்குபடுத்தி பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிராமப்புரங்களில் தற்போது 18 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கூடுதலாக 4 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்காக நடத்துநர்கள், ஓட்டுநர்கள் கூடுதல் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். பொது மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரசுப் பேருந்தில் தினமும் ஒன்றரை கோடி பேர் பயணம் செய்கின்றனர். முதல்வரின் உத்தரவின்படி, இடர்பாடின்றி மக்கள் பயணம் செய்யும் வகையில் போக்குவரத்து துறை செயல்பட்டு வருகிறது.
போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை ஆதரிக்கும் அதே வேளையில் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT