Published : 25 Mar 2022 12:50 PM
Last Updated : 25 Mar 2022 12:50 PM
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கும் என்றும், மானியக் கோரிக்கை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவை மண்டபத்தில் காலை 10 மணிக்கு மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கும்.
வருகிற 30.3.2022 அன்று, என்னுடைய தலைமையில் காலை 11 மணி அலுவல் ஆய்வுக்குழு கூடி, எந்தெந்த மானியக் கோரிக்கையை எந்த நாளில் எடுத்துக் கொண்டு விவாதிப்பது, சட்டப்பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பன குறித்து முடிவு செய்யும்" என்றார்.
என்னிடம் சொல்லிவிட்டுத்தான் சென்றார்.. தொடர்ந்து பேசிய அப்பாவு, "சட்டப்பேரவையில் பேசிய எதிர்கட்சித் துணைத் தலைவர் பட்ஜெட் உரையில், நேற்று முன்தினம் பேசும்போது, முதலில் என்னை முழுவதுமாக பேசவிடுங்கள், பின்னர் நிதியமைச்சர் பதிலளித்தால் போதும் என்று கூறினார். அதனடிப்படையில்தான், அதனை ஏற்றுக்கொண்டு முதல்வரும் அவ்வாறு பதிலளிக்குமாறு நிதியமைச்சரிடம் கூறினார்.
கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஓபிஎஸ் பேசினார். கடைசியாக ஒரு முக்கிய பணியின் காரணமாக வெளியே போக வேண்டிய சூழல் நிதியமைச்சருக்கு வந்தது. அதனடிப்படையில்தான் நிதியமைச்சர் வெளியே சென்றார். என்னுடைய கவனத்துக்கு தெரிவித்துவிட்டுத்தான் சென்றார். அமைச்சரவை என்பது கூட்டுப்பொறுப்பு .முதல்வர் தலைமையில் உள்ள அனைத்து அமைச்சர்களுக்கும் அந்த பொறுப்பு உண்டு. முதல்வரும் அங்கிருந்தார். எனவே இதில் குறை சொல்வதற்கு எனக்கு தெரிந்த அளவுக்கு ஒன்றுமில்லை. எனவே அதை காரணமாக கூறி நேற்று அதிமுகவினர் வெளிநடப்பு செய்திருக்க வேண்டாம் என்பது என்னுடைய கருத்து.
எந்தவொரு விசயத்திலும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று நடப்பதோ, வீம்பாக செயல்படுவதோ தமிழக முதல்வரின் நோக்கம் இல்லை. சட்டப்பேரவையில் யாரும் தன்னை புகழ்ந்து பேசுவதையோ, எதிர்க்கட்சிகளை இகழந்து பேசுவதையோ ரசித்துக் கொண்டே இருக்கமாட்டார். ஆரோக்யமாக ஜனநாயக முறைப்படி சட்டப்பேரவையில் என்ன தேவையோ அதை மட்டும் பேசும்படி கூறுபவர் முதல்வர்" என்றார்.
எங்களிடம் மட்டும் ஏன் கேட்கிறீர்கள்? "காமராஜர் அரங்கத்தை ஒப்பிடும்போது இந்த சட்டப்பேரவையில் இட நெருக்கடி உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கட்டப்பட்டு, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கால் திறக்கப்பட்டது ஓமந்தூரார் சட்டப்பேரவை கட்டிடம். ஆனால், அந்த இடத்தை உயர் சிறப்பு மருத்துவமனைக்கு என ஒருமுறை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மாற்றினார். அதன் பின்பு, இதே இடத்தில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சட்டப்பேரவையை நடத்தினர். அப்போது சட்டப்பேரவை இடமாற்றம் குறித்து நீங்கள் கேட்டீர்களா என்று எனக்கு நினைவு இல்லை. ஆனால் இப்போது கேட்கிறீர்கள்" என்று சட்டப்பேரவை இடமாற்றம் தொடர்பான நிருபர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
மேலும், "எதைச் செய்தாலும் தீர ஆராய்ந்து, தேவையான அளவு கலந்தாலோசித்து சரியான முடிவெடுக்கக்கூடியவர் முதல்வர். இதிலும், நல்ல முடிவை எடுப்பார். தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு சட்டமுன்வடிவை தமிழக ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக ஊடகங்கள் வாயிலாக தெரிந்துகொண்டேன்" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT