Published : 25 Mar 2022 11:36 AM
Last Updated : 25 Mar 2022 11:36 AM

'குடிநீர், மோர் பந்தல் அமைத்து மக்கள் தாகம் தணிக்கவும்' - அதிமுக நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் வலியுறுத்தல்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி | கோப்புப் படம்

சென்னை: அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களின் தாகத்தைத் தணிப்பதற்காக ஆங்காங்கே குடிநீர்ப் பந்தல்கள் மற்றும் நீர் மோர் பந்தல்களை அமைத்து, அவை சுகாதாரமான முறையில் செயல்படுவதை காலை,பிற்பகல் என இரண்டு வேளைகளிலும் கண்காணித்திட வேண்டும் என்று அதிமுக தொண்டர்களுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், "எம்ஜிஆரின் அயராத உழைப்பாலும், அவர் அள்ளி, அள்ளித் தந்த கொடைத் தன்மையினாலும், கோடிக்கணக்கான கட்சித் தொண்டர்களின் தியாகத்தாலும், தமிழக மக்களின் வேண்டுதலாலும் உருவான இயக்கம் தான் அதிமுக. அவரது மறைவுக்குப் பின்னர் கட்சியை அல்லும், பகலும் அயராது பாடுபட்டு தன்னையே அர்ப்பணித்து ஜெயலலிதா இந்த இயக்கத்தை வரலாற்றுச் சிறப்புமிக்க பல வெற்றிகளைப் பெற்ற இயக்கமாக உருவாக்கிக் காட்டினார்கள்.

அந்த வகையில், நம் இருபெரும் தலைவர்களின் பூரண நல்லாசியோடு அதிமுக தன்னலம் கருதாமல் பொது நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு கட்சிப் பணிகளை ஆற்றுவதிலும், மக்கள் பணிகளை மேற்கொள்வதிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதை பெருமையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அதிமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில், கட்சியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் , தாங்கள் வாழும் பகுதிகளில் ஆங்காங்கே குடிநீர் பந்தல்கள், நீர் மோர் பந்தல்கள் அமைத்து மக்களின் தாகத்தைத் தணிப்பது வழக்கம்.

அதே போல் இந்த ஆண்டும், கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு, கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் இப்பொழுதே தாங்கள் வாழும் பகுதிகளில், ஆங்காங்கே குடிநீர் மற்றும் நீர் மோர் பந்தல்களை உடனடியாக அமைத்து, மக்களின் தாகத்தைத் தணிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களின் தாகத்தைத் தணிப்பதற்காக ஆங்காங்கே அமைக்கும் குடிநீர்ப் பந்தல்கள் மற்றும் நீர் மோர் பந்தல்களை காலையில் ஒரு முறையும், பிற்பகல் ஒரு முறையும் நேரில் சென்று பார்வையிட்டு சுகாதாரமான முறையில் அவை செயல்படுவதற்கு ஏற்ற திட்டத்தோடு இந்தப் பணியினை நடைமுறைப்படுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x