Published : 25 Mar 2022 06:28 AM
Last Updated : 25 Mar 2022 06:28 AM
சென்னை: மார்ச் 27-ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக உட்கட்சித் தேர்தலில் தனது செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்த முனைப்பு காட்டி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல்கடந்த ஆண்டு டிச.7-ம் தேதி நடைபெற்றது.இதில், ஒற்றை வாக்கு அடிப்படையில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக கே.பழனிசாமியும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், பெரம்பலூர், அரியலூர், மதுரை,சேலம் ஆகிய மாவட்டங்களில் கிளை, பேரூராட்சி வார்டு, நகராட்சி வார்டு, மாநகராட்சி வட்ட நிர்வாகிகள் தேர்தல்கள் நடத்தப்பட்டன.
அதிமுகவுக்குள் ஏற்பட்ட கோஷ்டி பூசலாலும், 4 ஆண்டுகள் முதல்வராக இருந்ததாலும் இபிஎஸ்-ஸின் செல்வாக்கு கட்சிக்குள் அதிகரித்தது. இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி, தனது ஆதரவாளர்களை உள்கட்சித் தேர்தலில் அதிகமாக நிறுத்தினார். அதேநேரம், உள்கட்சித் தேர்தலில் ஓபிஎஸ் பெரிய அளவுக்கு ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக இபிஎஸ் ஆதரவாளர்கள் அதிகமான பதவிகளைக் கைப்பற்றியதாகக் கூறப்பட்டது.
இதனால், மீதமுள்ள மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் தேர்தலை நடத்த இபிஎஸ் தரப்புவேகம் காட்டியது. ஆனால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதால், ஒன்றிய, நகர, பேரூராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது.
இதற்கிடையே, ஓபிஎஸ் பங்கேற்ற தேனிமாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலா, தினகரனை கட்சியில் இணைக்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால், கட்சி நிர்வாகிகளிடம் ஓபிஎஸ் மீண்டும் பரபரப்பாகப் பேசப்பட்டார்.
மேலும், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் என தனது ஆதரவாளர்களிடம் ஓபிஎஸ் அடிக்கடி ஆலோசனை நடத்தி உள்கட்சி தேர்தலில் வேகம் காட்டினார். அதேபோல, அதிருப்தி நிர்வாகிகளைச் சந்தித்தும் பேசி வந்தார். இந்நிலையில், 25 மாவட்டங்களில் ஒன்றிய, நகர, பேரூராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக, மாவட்டச் செயலாளர்கள் சார்பாக நிறுத்தப்படும் நபர்களே நிர்வாகிகள் தேர்தலில் வெற்றி பெறுவார்கள். தற்போது, கோவை, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பூர் போன்ற கொங்கு மற்றும் வட மாவட்டங்களுக்கான தேர்தலே நடைபெற உள்ளது. இதில் பெரும்பாலான மாவட்டங்களில் இபிஎஸ் பலமாக உள்ளார். எனவே, கொங்கு மாவட்ட அமைப்புகளில் ஓபிஎஸ், தனது ஆதரவாளர்களை வெற்றி பெறவைக்க முனைப்பு காட்டி வருகிறார்.
கொங்குப் பகுதியில் செல்வாக்கை நிலைநிறுத்தினால், சுலபமாகத் தென் மாவட்டங்களில் இழந்த தனது செல்வாக்கை மீண்டும்பெற்று விடலாம் என்று ஓபிஎஸ் கருதுகிறார்.இதற்காக கொங்கு மற்றும் வட மாவட்டங்களின் முன்னாள் மாவட்டத் தலைவர்கள், எம்எல்ஏ, எம்பிக்களிடம் ஓபிஎஸ் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. கொங்கு மாவட்டங்களில் உள்ள ஒருசில மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்எல்ஏக்களும் ஓபிஎஸ்-ஸுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
இந்நிலையில், சட்டப்பேரவைக் கூட்டத்தில் நேற்று பங்கேற்ற பின்னர், சென்னையில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார். இதில் இபிஎஸ் மீது அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றதாகவும், போட்டியிட விரும்பும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு தேர்தல் விண்ணப்பக் கட்டணத்துக்கான பணம் மற்றும் பிற செலவுகளுக்கும் அவர்கள் பொறுப்பேற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, கொங்கு மாவட்டங்களின் நிர்வாகிகள் தேர்தலில் தனது ஆதரவாளர்களை வெற்றி பெற வைப்பதற்கான வேலைகளைத் தொய்வின்றி செய்ய மூத்ததலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களிடம் இபிஎஸ் தொடர்ந்து பேசி வருகிறார்.
இவ்வாறாக, உள்கட்சித் தேர்தலில் தங்கள் ஆதரவாளர்களை வெற்றி பெற வைக்க ஓபிஎஸ், இபிஎஸ் முனைப்புக் காட்டுவதால், வரும் 27-ம் தேதி நடைபெறும் அதிமுக அமைப்பு தேர்தல், தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...