Published : 05 Jun 2014 09:57 AM
Last Updated : 05 Jun 2014 09:57 AM
வேலூர் அருகே பயங்கர ஆயுதங்க ளுடன் திமுக ஒன்றியச் செயலாளர் பாபுவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். செம்மர கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ள இவருக்கு கரகாட்ட மோகனாம்பா ளுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி தாராபடவேடு கோவிந்தராஜ முதலி தெருவைச் சேர்ந்த ஜமுனா என்பவரது வீட்டில் கரகாட்ட கலைஞர் மோகனாம்பாள் கடந்த 3 மாதங்களாக வாடகைக்கு தங்கியிருந்தார். அவரது வீட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு போலீஸார் நடத்திய திடீர் சோதனையில் ரூ.4 கோடியே 4 லட்சத்து 73 ஆயிரம் ரொக்கம், 73 பவுன் நகை, கடன் பத்திரங்கள், வங்கி முதலீடுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து, மோகனாம்பாள் தலைமறைவானார். அவருடன் சகோதரி நிர்மலா மற்றும் அவரது மகன் சரவணன் ஆகியோரையும் காணவில்லை. செம்மர கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய சரவணன் தலைமறைவானது போலீஸாருக்கு பெருத்த சந்தே கத்தை ஏற்படுத்தியது. வட்டிக்கு பணம் சம்பாதித்த மோகனாம்பாள் குறுகிய காலத்தில் கோடீஸ்வரியாக ஆசைப்பட்டு, தனது சகோதரி மகன் சரவணன் உதவியுடன் செம்மர கடத்தல் தொழிலில் ஈடுபட்டார் என கூறப்பட்டது.
மோகனாம்பாள் மற்றும் சரவணன் ஆகியோர் உடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் யார் என போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், அணைக்கட்டு ஒன்றிய திமுக செயலாளர் பாபு என்பவரும் உண்டு.
இதற்கிடையில், கணியம்பாடி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் திமுக ஒன்றியச் செயலாளர் பாபுவை செவ்வாய்க்கிழமை இரவு வேலூர் தாலுகா போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் பிரபல செம்மர கடத்தல் கும்பலைச் சேர்ந்த போண்டா வெங்கடேசன், சேட்டு, மூர்த்தி, ஜெயராமன் உள்ளிட்டோர் தேடப்படும் குற்றவாளிகளாக உள்ளனர். கைது செய்யப்பட்ட பாபுவிடம் மோகனாம்பாள் மற்றும் சரவணன் குறித்த சில முக்கிய தகவல்களை விசாரித்து, சேகரித்துள்ளனர்.
இதுகுறித்து பெயர் கூற விரும்பாத போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘‘கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு செம்மர கடத்தல் தொழிலில் ஈடுபட்டவர் பாபு. ஆந்திர மாநிலத்தில் செம்மரங்களை வெட்டி கடத்த ஜவ்வாது மலைக் கிராம இளைஞர்களை திரட்டி, அழைத்துச் சென்றுள்ளார். செம்மர கட்டைகள் கடத்தும் தொழிலில் பணம் அதிகமாக புழங்கியதால் குறுகிய காலத்தில் பணக்காரராக மாறினார். தனது கடத்தல் தொழில் பாதுகாப்புக்காக திமுகவில் ஒன்றியச் செயலாளர் பதவி கை கொடுத்தது.
மறுபக்கம் செம்மர கடத்தல் கும்பலுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்த பாபு, தனக்கு நம்பிக்கையான ஆட்கள் உதவியுடன் கடத்தல் தொழிலை செய்துவந்துள்ளார். தேடப்படும் குற்றவாளி சரவணனுடன் ஆரம்ப காலத்தில் பாபுவுக்கு தொடர்பு இருந்துள்ளது. தற்போது அந்த தொடர்பில் பாபு இருக்கிறாரா என தெரியவில்லை. அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினால் கரகாட்ட மோகனாம்பாள் மற்றும் சரவணனுடன் தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் கிடைக்கும்’’ என்றனர்.
செம்மர கடத்தல் கும்பலுடன் நெருங்கிய தொடர்புடைய பாபு கைது செய்யப்பட்ட சம்பவம் அணைக்கட்டு பகுதி திமுக-வின ரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT