Published : 24 Mar 2022 09:51 PM
Last Updated : 24 Mar 2022 09:51 PM

திருப்பூர் | வீடு இடிந்து காயம் அடைந்த முதியவர் - பல மணிநேரம் மலைப்பாதையில் சுமந்து வந்த கிராம மக்கள்

திருப்பூர்: திருப்பூர் அருகே உள்ள குழிப்பட்டி மலைவாழ் கிராமத்தில் வீடு இடிந்து காயம் அடைந்த முதியவரை பல மணிநேரம் மலைப்பாதையில் தொட்டில் கட்டி தூக்கி வந்து மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்துள்ளனர் அந்த கிராம மக்கள்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை ஒட்டியுள்ள குழிப்பட்டி வனப்பகுதியில் வசித்து வருபவர் பொன்னுசாமி (58). விவசாயக் கூலி. குழிப்பட்டியில் மழை பெய்ததில் பொன்னுசாமியின் மண் வீடு இடிந்து விழுந்தது. இதில் அவரது காலில் கடுமையான காயம் ஏற்பட நடக்க முடியாத நிலைக்குச் சென்றார். இதையடுத்து பொன்னுசாமியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல மகன் பழனி மற்றும் கிராமத்தினர் முடிவு செய்தனர். அப்பர் ஆழியாறு வழியாக சென்றால், 7 மணி நேரம் ஆகும் என்பதால், குழிப்பட்டியில் இருந்து பொன்னாலம்மன் சோலைக்கு தொட்டில் கட்டி தூக்கி வந்தனர். மழையால் பாதை சேறும், சகதியுமாக இருந்ததால் மிகுந்த சிரமத்துக்கிடையே பல மணிநேரத்துக்குப் பின், உடுமலை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இது தொடர்பாக மலைவாழ் கிராம மக்கள் கூறியது: "2006-ம் ஆண்டு வன உரிமைச் சட்டப்படி ஒரு ஹெக்டர் நிலம் ஒதுக்கி, திருமூர்த்தி மலையில் இருந்து குருமலைக்கு சாலை அமைத்தால் அரைமணி நேரத்தில் எங்கள் மலையிலிருந்து திருமூர்த்திமலை வந்தடைய முடியும். தொடர்ச்சியாக வன உரிமைச் சட்டப்படி அந்தப் பகுதிக்கு சாலை வசதி கேட்டு கோரிக்கை விடுக்கிறோம். ஆனால், வனத்துறை உயர் அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகின்றனர்.

மலைவாழ் மக்களுக்கு சட்டப்படி சாலை அமைத்துத் தர தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சாலை அமைத்தால் மலைவாழ் மக்களின் உயிர்கள் பாதுகாக்கப்படும். மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கான கல்வியும் தொய்வின்றி தொடர்ந்து கிடைக்கும்.

வனப்பகுதியில் குற்றங்கள் ஏற்பட்டால் அதிகாரிகள் விரைந்து வந்து தடுக்கவும் முடியும். வனத்தீ ஏற்பட்டால் உடனே வந்து அணைக்க முடியும். இதுபோன்ற அவசர காலங்களில் வந்து செல்வதற்கவாவது, சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x