Published : 24 Mar 2022 08:16 PM
Last Updated : 24 Mar 2022 08:16 PM

6 மாதங்களில் 763-ல் 497 புகார்கள் மீது நடவடிக்கை - ட்விட்டர், ஃபேஸ்புக்கில் சென்னை மாநகராட்சி ‘ஆக்டிவ்’

சென்னை: சென்னை மாநகராட்சியின் ஃபேஸ்புக், இன்ஸ்டா கிராம் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடக தளங்களை சுமார் 2.80 லட்சம் நபர்கள் பின் தொடர்கின்றனர் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் மொத்தம் 763 புகார்கள் பெறப்பட்டு, இவற்றில் 497 புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சியின் ஃபேஸ்புக், இன்ஸ்டா கிராம் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடக தளங்களை சுமார் 2.80 லட்சம் நபர்கள் பின் தொடர்கின்றனர்.பெருநகர சென்னை மாநகராட்சி பொதுமக்களுக்கு மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்து தெரிவிக்கவும், கரோனா போன்ற பெருந்தொற்று மற்றும் மழை வெள்ளம் போன்ற பேரிடர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஃபேஸ்புக் , இன்ஸ்டா கிராம் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடக தளங்களை சிறப்பாக பயன்படுத்தி வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சமூக ஊடக தளமானது கரோனா பெருந்தொற்று காலத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கரோனா தொற்று குறித்த புள்ளி விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் தொடங்கப்பட்டது. பின்னர், ஒரு தகவல் தொடர்பு தளமாகவும், பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் தளமாகவும் பயன்படுத்த தொடங்கியது.

செப்டம்பர் 2021 முதல் மார்ச் 2022 வரை 6 மாதங்களில் பெருநகர சென்னை மாநகராட்சியின் ட்விட்டர் தளத்தின் மூலம் 651 புகார்களும், இன்ஸ்டாகிராம் மூலம் 90 புகார்களும், ஃபேஸ்புக் தளத்தின் மூலம் 22 புகார்களும் என மொத்தம் 763 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 497 புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தவிர்த்து கரோனா தடுப்பூசி தொடர்பான கோரிக்கைகளும் சமூக ஊடக தளங்களின் வாயிலாக பெறப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 39,301 பின்தொடர்பவர்கள் உள்ளனர், பின்தொடராதவர்களையும் சேர்த்து மொத்தம் 1,05,165 பார்வையாளர்கள் உள்ளனர். மாநகராட்சியின் திட்டங்கள், அறிவிப்புகள், ஆய்வு குறித்த செய்திகள் 24,65,146 பதிவுகளுடன் அதிக கவனத்தை ஈர்த்துள்ளன,

தற்போது பெருநகர சென்னை மாநகராட்சியின் முகநூல் பக்கத்தில் 56,466 பின்தொடர்பவர்கள் உள்ளனர், சராசரியாக ஒரு பதிவு 4,43,600 பேரை சென்றடைகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் ட்விட்டர் பக்கத்தில் 1,84,641 பின்தொடர்பவர்கள் உள்ளனர். நவம்பர் 2021 இல் சராசரியாக ஒரு நாளைக்கு 2,25,200 இம்ப்ரெஷன்களுடன் 6.8 மில்லியன் இம்ப்ரெஷன்களைப் பெற்றுள்ளது. 2021 நவம்பர் மாதத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி மழை பற்றிய தகவல்களை ட்விட்டரில் வெளியிட்டது. மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை அவசர தேவைகளுக்கு உடனடியாக உதவி வழங்கப்பட்டது. மேலும் நவம்பர் 2021 இல் மழை தொடர்பாக வெளியிடப்பட்ட அவசர உதவி எண்ணானது 6,68,095 பதிவுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 2021 முதல் மார்ச் 2022 வரை பெருநகர சென்னை மாநகராட்சி ட்விட்டர் பக்கமானது 6.5 மில்லியன் இம்ப்ரெஷன்களைப் பெற்றுள்ளது. ஒரு நாளில் அதிகபட்சமாக 71,800 இம்ப்ரெஷன்களைப் பெற்றுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி சமூக ஊடகங்களின் வாயிலாக பொதுமக்களுக்கு தேவையான சேவைகளை வழங்குவதில் தொடர்ந்து தனது சிறப்பான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

ட்விட்டர் பக்கம் > https://twitter.com/chennaicorp
ஃபேஸ்புக் பக்கம் > https://www.facebook.com/GreaterChennaiCorporation/

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x