Published : 26 Apr 2016 04:32 PM
Last Updated : 26 Apr 2016 04:32 PM
தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பால் பிரிவுகளில் உள்ள அனைத்து குறட்பாக்களையும் முழுமையாக கற்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் மாணவர்களின் அறிவு, ஞானமும் மேம்பட்டு பயங்கரவாதம், குற்றங்கள், மதுவின் பாதிப்புகள் குறையும் என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் திருக்குறளின் 1330 குறட்பாக்களையும் பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவிடக்கோரி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் எஸ்.ராஜரத்தினம் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
அவர் தனது மனுவில், ‘தற்போதைய சூழலில் சமுதாயத்தில் ஒழுக்கமும் நன்னடத்தையும் குறைந்து வருகிறது. குறிபபாக இளைய சமுதாயத்திடம் ஒழுக்கம் பற்றிய சிந்தனை நன்னடத்தை, பெரியோரை மதித்தல் பெரிதும் குறைந்துள்ளது.
இதனால் இளைய சமுதாயத்துக்கு குறிப்பாக ஆறாம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு திருக்குறளில் அறத்துப்பால் மற்றும் பொருட்பாலில் உள்ள அனைத்து குறட்பாக்களையும் பயிற்றுவிக்க வேண்டும்.
இளம் பிராயத்தில் திருக்குறள் பயிற்றுவிக்கப்பட்டால் நேர்மையும், ஒழுக்கமும் உள்ள சமுதாயம் உருவாகும். சமீப காலத்தில் இளம் சிறார்கள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது பெருகி உள்ளது.
அவர்களை சீர்த்திருத்த இளம் பருவம் தொட்டே திருக்குறளை பயிற்றுவிற்றால் நாளைய சமுதாயத்தின் சிறந்த குடிமக்களாக அவர்கள் வருவார்கள். இதனால் திருக்குறளை முழுவதுமாக பள்ளி மாணவர்களுக்கு விளக்கமாக கற்பிக்க உத்தரவிட வேண்டும் எனக் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஏ.சரவணகுமார் வாதிடும்போது, ‘மனித வாழ்க்கையின் அனைத்து கூறுகளை மற்ற எந்த இலக்கியங்களும் குறிப்பிடாத அளவில் திருக்குறளில் கூறப்பட்டுள்ளது.
உலகத்தின் ஒட்டுமொத்த மானுடத்திற்கான படைப்பாக்கம் திறக்குறள், ஒவ்வொரு நாள் வாழ்க்கைக்கான நெறிமுறைகள் திருக்குறளில் அடங்கியுள்ளது.
கல்வி, நன்னடத்தை, விருந்தோம்பல், செய்நன்றியறிதல், வாய்மை, பெரியாரைத் துணைக்கோடல், நட்பு, நாடு, புகழ், ஒழுக்கம், அனைத்தையும் பற்றியும் தெள்ளத் தெளிவாக அறிவுறுத்தும் படைப்பு அது. திருக்குறளை மாணவர்களுக்கு விரிவான பாடத்திட்டமாக்கினால் இளம் வயதிலே, அவர்கள் மனதில் ஒழுக்கம், நன்னடத்தை மற்றும் பிற நற்குணங்கள் விதைக்கப்படும். இதனால் பாடத்திட்டத்தில் அனைத்து திருக்குறளையும் சேர்த்து, அடுத்த கல்வியாண்டில் இருந்து மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்றார்.
அரசு வழக்கறிஞர் வி.ஆர்.சண்முகநாதன் வாதிடும்போது, ‘ஏற்கெனவே மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் திருக்குறள் சேர்க்கப்பட்டுள்ளது. அதை தவிர்த்து வேறு பல இலக்கியங்களும் கற்பிக்கப்படுகிறது. அரசின் கொள்கை முடிவில் இதுபோன்ற கோரிக்கைகளை ஏற்க முடியாது. எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
இந்திய அரசிலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கான வாழ்வாதாரத்தை உறுதி செய்கிறது. தனிமனித உரிமையும், ஒன்றுபட்ட வாழ்க்கையும், தராதரமும், ஆரோக்கியமும், சமத்துவமுமு, உணவு உடை, உறைவிடம், கல்வி போன்ற அடிப்படைத் தேவைகள் குறித்தும் அரசியலமைப்பு சட்டம் உத்திரவாதம் அளிக்கிறது. அதேபோல் ஒவ்வொரு குடிமகனும் கடமையுள்ளத்தோடு, சமுதாயத்தையும், நாட்டையும் காக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
ஆனால் இவற்றிற்கு எதிராக இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், இளம் சிறார்களின் குற்றங்கள், விவாகரத்து வழக்குகள் ஆகியன மலிந்து போனதுடன், முறையற்ற வாழ்க்கைத்தரமும் நிலவி வருகிறது.
இந்நிலையில் இளம் பிராயத்தினரை முறையான கல்வியுடன் நேர்வழிப்படுத்த முடியுமானால் அவர்கள் சிறந்த குடிமகன்களாக வருவார்கள்.
திருக்குறளை விரிவான விதத்தில், மணப்படப் பகுதி என்ற குறுகிய அளவில் இல்லாமல், உரிய விளக்கங்களுடன், அனைத்துக் கூறுகளும், அலசப்பட்டு, மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் போது அவர்களின் அறிவும் ஞானமும் மேம்படும். இன்றைக்கு சமுதாயத்தில் பெரும் பிரச்சினைகளாக இருக்கக்கூடிய பயங்கரவாதம், கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் குற்றங்கள், வேலையின்மை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், மதுவின் பாதிப்பு ஆகியவற்றை தெளிவாக உணர்ந்து, இளைய சமுதாயத்தினர் தங்களின் வாழ்க்கையை செம்மைப்படுத்திக்கொள்வார்கள்.
எனவே, இந்த விஷயங்களை கருத்தில்கொண்டு உலக மக்களுக்கு பொதுவானது என்று அறியப்படும் திருக்குறளை, மனித வாழ்வு சம்பந்தப்பட்ட அனைத்து கூறுகளையும் உள்ளடக்கி எவ்வித வாழ்க்கை வாழ வேண்டும் என வலியுறுத்தும் திருக்குறளை இளம் பிராயத்தில், குறிப்பாக 6-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வெறும் மனப்பாட பகுதி என்று இல்லாமல் திருக்குறளில் அறத்துப்பால் மற்றும் பொருட்பால் பிரிவுகளில் உள்ள அனைத்து குறட்பாக்களையும் விளக்கமாக பயிற்றுவிக்க வேண்டும். இதனை வரும் கல்வி ஆண்டில் இருந்து நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.
நீதிபதி ஆர்.மகாதேவன் தனது தீர்ப்பில், ‘கல்வி தொடர்பாக உலகின் பல்வேறு அறிஞர்கள் தெரிவித்த கருத்துக்களை ஒப்பிட்டு, 2000 ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவரால் தொலை நோக்கு பார்வையுடன் உருவாக்கப்பட்ட குறள்கள் மட்டுமே சமுதாயத்தை சீர்படுத்த முடியும், திருக்குறளை விளக்கமாக கற்பதும், பயில்வதுமே சிறந்த வாழ்விற்கான வழி எனத் தெரிவித்து 50 குறள்களை உதாரணம் காட்டியுள்ளார்.
மேலும் ஒழுக்கத்தை பேணுதலும் ஞானம் மிக்கவர்களாக இளைஞர்களை மாற்றுவதுமே வருங்கால சமுதாயத்தின் மேன்மைக்கான வழி என்றும், பல்வேறு சிறந்த இலக்கியங்கள், இந்த மண்ணில் தோன்றியிருந்தாலும் திருக்குறள் போல் மனிதரின் வாழ்வை மேம்படுத்தும் சிறந்த படைப்பு வேறு ஒன்றும் இல்லை என திருக்குறளின் பெருமையை தீர்ப்பில் நீதிபதி பட்டியலிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT