Published : 24 Mar 2022 05:52 PM
Last Updated : 24 Mar 2022 05:52 PM
வேலூர்: வேலூரில் ஆட்டோவில் ஆண் நண்பருடன் பயணித்த பெண் மருத்துவரை கத்தி முனையில் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை வேலூர் காவல் துறையினர் விதித்துள்ளனர்.
வேலூரில் கடந்த 16-ஆம் தேதி நள்ளிரவு ஆட்டோவில் ஆண் நண்பருடன் பயணித்த பெண் மருத்துவரை ஒரு கும்பல் கத்தி முனையில் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். இது தொடர்பாக கடந்த 22-ஆம் தேதி பெண் மருத்துவர் அளித்த புகாரின் பேரில் 2 சிறார்கள் உள்ளிட்ட 5 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதையடுத்து, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவும் வாகன சோதனையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில், வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.
இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி பேசும்போது, ‘‘வேலூர் மாநகர பகுதியில் இரவு நேரங்களில் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்கள் பகுதிக்கு ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இரவு நேரங்களில் ஆட்டோ ஓட்டக்கூடிய ஓட்டுநர்கள் தங்களுடைய முகவரி, புகைப்படம், செல்போன் எண் உள்ளிட்டவற்றை காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும். ஆட்டோக்களில் செல்போன் எண் போட்டோவுடன் கூடிய முகவரியை ஒட்டியிருக்க வேண்டும்.
உங்கள் ஆட்டோவில் வரும் பயணிகளை உங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து சேவை செய்ய வேண்டும். மக்கள் ஆட்டோ டிரைவர்களைதான் முழுமையாக நம்பி இருக்கின்றனர். முகவரி கூட உங்களைப் பார்த்துதான் கேட்கிறார்கள். அப்படிப்பட்ட நம்பிக்கையை வீணடித்து விடாதீர்கள். ஒரு சில ஆட்டோ ஓட்டுநர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் குறித்த விவரங்களை ரகசியமாக காவல் துறையினருக்கு தெரிவிக்க வேண்டும்’’ என்று அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன், டிஎஸ்பிக்கள் பழனி, ராமமூர்த்தி மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.
’என்கவுன்டர் செய்ய வேண்டும்’ - கூட்டத்தில் பங்கேற்ற சில ஆட்டோ ஓட்டுநர்கள் பயணிகள் பாதுகாப்பு குறித்த பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். அப்போது, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ‘குடும்பத்திற்காக ஆட்டோ ஓட்டி வருகிறோம். ஒரு சிலர் நடந்து கொள்ளும் விதத்தால் அனைத்து ஆட்டோ டிரைவர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. வேலூரில் ஆட்டோவில் பயணித்த கடத்தி சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை கும்பலை என்கவுன்டரில் சுட்டுக் கொல்ல வேண்டும்’ என ஆவேசமாக கூறியதால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT