Published : 24 Mar 2022 04:17 PM
Last Updated : 24 Mar 2022 04:17 PM
சென்னை: ஜெயலலிதாவின் கை ஆட்சியிலிருந்து எப்போது நகர்ந்ததோ, அதன்பின் ஆட்சிக்கு வந்தவர்களின் திறமையின்மை மற்றும் தவறான செயல்களால், 15.55 சதவீதத்தில் இருந்து 22 சதவீதத்திற்கு மேல் கடன் உற்பத்தி ஏறிவிட்டது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதக் கூட்டம் நடைபெற்றது. நான்காவது நாளான இன்று, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியது: "இந்த நிதிநிலை சரிவுக்கு காரணம் கடந்த 10 ஆண்டு ஆட்சியில் இருந்த அதிமுகதான். குறிப்பாக ஜெயலலிதா 2014-ல் முதல்வர் பொறுப்பிலிருந்து விலகிய பிறகுதான் இந்த சரிவு ஆரம்பித்தது. இந்த சரிவு கரோனாவுக்கு முன்பே மிகவும் அதிகமாகிவிட்டது. 2018-19 மற்றும் 2019-20 இல் மொத்த மாநில வருமானம் வெறும் 800 கோடி ரூபாய்தான். ஒரு வருடம் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 741, மற்றொரு வருடம் ஒரு லட்சத்து 74,525. வெறும் 800 கோடி ரூபாய்தான் ஓர் ஆண்டுக்கும் இன்னொரு ஆண்டுக்கும் கரோனா இல்லாத காலத்தில் வருமானத்தைக் கூட்டியிருக்கிறார்கள். இதிலிருந்து எவ்வளவு மோசமான நிதிநிலையென்று இதன்மூலம் அறிய முடிகிறது. அதற்கு காரணம் மேலாண்மை குறைபாடு.
திமுக தலைவர் கருணாநிதியின் ஆட்சி 2011-ல் முடியும்போது, மொத்தக் கடன்தொகை உற்பத்தியில் 17.33 சதவீதம். இதுபொறுப்புள்ள நிதி மேலாண்மை சட்டம் வந்தபோது 28, 29 ஆக இருந்தது. இது படிப்படியாக 17.33 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபின்னர் அவர் இன்னும் குறைத்தார். அதாவது 15.55 வரை குறைந்தது. ஆனால், ஜெயலலிதாவின் கை ஆட்சியிலிருந்து எப்போது நகர்ந்ததோ, 15.55 சதவீதத்தில் இருந்து கரோனா வருவதற்கு முன்னரே, 22 சதவீதத்திற்கு இவர்களது திறமையின்மையினால், தவறான செயலினால், கடன் உற்பத்தியில் 22 சதவீதத்திற்கு மேல் ஏறிவிட்டது.
இவையெல்லாம் கரோனா என்ற சொல்லை நாம் கேட்பதற்கு முன் நடந்த செயல். அதன்பின் கரோனா வந்து 22 சதவீதம் 25 சதவீதமாகி, இப்போது 25.84 சதவீதமாக இருக்கிறது. இதை நாங்கள் படிப்படியாக குறைப்போம், அது எங்களுடைய கடமை, எங்களுடைய நம்பிக்கை.
2020-21 அப்போதைய அதிமுக அரசு திட்டமிட்டது 2 லட்சத்து 19 ஆயிரம் கோடி. ஆனால் இறுதியாக முடிந்தது 1 லட்சத்து 74 ஆயிரம் கோடி. 45 ஆயிரம் கோடி வருமானத்தை இழந்து, இதனால் திட்டமிட்ட வெறும் 21 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறையை 62 கோடியாக கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகரித்து நிதிப் பற்றாக்குறையை 83 ஆயிரம் கோடியாக அதிகரித்தனர். இதுவரை இருக்கும் பெரிய சாதனையாகும்.
திமுக ஆட்சிக்கு வந்தபின்னர், கரோனா இரண்டாவது அலை. ஆக்சிஜன் இன்று இருக்குமா, நாளை இருக்குமா பதற்றமான சூழல். எத்தனையோ புதிய மருத்துவ வசதிகள் உருவாக்கப்பட்டது. இவையெல்லாம் தாண்டி, அதிமுக ஆட்சியில் போட்ட திட்டமான 2 லட்சத்து 19 ஆயிரம் கோடியிலிருந்து வெறும் 16 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே குறைவாக, 2 லட்சத்து 3 ஆயிரம் கோடி 877 வருமானம் இங்கே பெறப்பட்டோம். அரசின் சீரிய முயற்சியால், ஒரு ஆண்டில் 16 ஆயிரம் கோடி மட்டுமே திமுக ஆட்சியில் சரிந்தது. அதிமுக ஆட்சியில் 45 ஆயிரம் கோடியை சரியவிட்டனர்.
கரோனா இரண்டாவது அலை, மூன்றாவது அலை, வெள்ளம் என பல பேரிடர்கள் வந்தபோதும் திமுக ஆட்சியில் நிதிநிலையை சரியவிடவில்லை. புதிதாக 20 ஆயிரம் கோடி செலவு செய்து, கடன் தள்ளுபடிக்கு, குடும்பங்களுக்கு 4 ஆயிரும் ரூபாய் உள்ளிட்ட பணிகளுக்கு செலவிட்டு, அதிமுக ஆட்சியில் போடப்பட்டிருந்த வருவாய் பற்றாக்குறைக்கு குறைவாக, 2 ஆயிரம் கோடியாக கொண்டு வந்து நிதிப்பற்றாக்குறையை குறைத்து, அவர்கள் போட்டிருந்த கடன் மதிப்பீட்டில் 14 ஆயிரம் கோடி குறைத்து இந்த கடனை முடித்து வைத்திருக்கிறோம்.
எனவே, யாராவது இதுகுறித்து பேச வேண்டும் என்றால், ஓ.பன்னீர்செல்வம் எத்தனையோ கருத்து கூறினார். அவருக்கு நான் ஒன்றை கூறுகிறேன், நான் வகிக்கும் இந்த பொறுப்பில் அவர் இந்த பதவியில் மூத்தவர் என்ற அடிப்படையிலும், எங்கள் இருவருக்கும் குடும்ப ரீதியாக உறவு உள்ளது இருந்தாலும்,தனிப்பட்ட முறையில் ஒரு கோரிக்கை வைக்கிறேன். நேற்று தவறான வாதம் செய்தது, ஒருநாள் முன்னாள் நிதியமைச்சருக்கு அழகு இல்லை. சரியான கருத்தைப் பேசுங்கள்" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT