Last Updated : 24 Mar, 2022 04:10 PM

 

Published : 24 Mar 2022 04:10 PM
Last Updated : 24 Mar 2022 04:10 PM

'மருத்துவமனைக்கு கூட செல்ல முடியாது' - 4 வழிச்சாலை பாலம் கட்ட எதிர்ப்பு: புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் கிராம மக்கள் மறியல்

புதுச்சேரி: நான்கு வழிச்சாலையில் மேம்பாலம், தடுப்புச்சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் புதுச்சேரி - விழுப்புரம் நெடுஞ்சாலை பகுதியில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுச்சேரி - விழுப்புரம் இடையே போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இச்சூழலில் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி வழியாக நாகப்பட்டினம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக கண்டமங்கலம், திருபுவனை, திருபுவனை பாளையம், அரியூர், திருவண்டார்கோவில், மதகடிப்பட்டு, கெங்கராம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள், வீடுகள் இடிக்கப்பட்டு சாலை விரிவாக்க பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

மழைநீர் செல்லும் வகையில் சாலையின் குறுக்கே பல்வேறு இடங்களில் சிறிய பாலங்களும் அமைக்கப்படுகின்றன. இந்த நிலையில் திருபுவனை, திருவண்டார் கோவில் ஆகிய பகுதிகளில் கிராமப்புற சாலைகளை இணைக்கும் வகையில் 2 மேம்பாலங்கள் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடக்கிறது.

இச்சூழலில் நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகளுக்காக புதுச்சேரி எல்லையில் மதகடிப்பட்டில் உள்ள அடையாள அலங்கார வளைவு, காமராஜர் சதுக்கம் ஆகியவை இடிக்கப்பட்டன. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், நான்கு வழிச்சாலையில் மேம்பாலம், தடுப்புச்சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அரியூர் அரசு மருத்துவமனை எதிரே மறியலில் இன்று ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடும் பாதிப்பு அடைந்தது.

போராட்டம் குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், "விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிகளால் பல தலைமுறையாக வாழ்ந்த வீடு, கடை மற்றும் உடைமைகளை இழந்துள்ளோம். குறிப்பாக அரியூர், அனந்தபுரம், பங்கூர் மற்றும் சுற்றுவட்டாரத்திலுள்ள பல கிராம மக்களின் வாழ்வாதாரம் மேலும் பாதிக்கும் வகையில் பாலம், தடுப்புச்சுவர் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. புதுச்சேரி அரசு இவ்விஷயத்தில் தலையிடவேண்டும். தடுப்புச்சுவர் கட்டினால் மருத்துவமனைக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்படும். அதனால் எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டுள்ளோம்" என்று கூறினர்.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மற்றும் அதிகாரிகள், பாலம் பணிப்பற்றி சமந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலந்து ஆலோசிப்பதாக உறுதி அளித்ததையடுத்து, கிராம மக்கள் கலைந்துச் சென்றனர். மறியல் காரணமாக சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், போக்குவரத்து சீராக பல மணி நேரம் ஆனது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x