Published : 24 Mar 2022 12:39 PM
Last Updated : 24 Mar 2022 12:39 PM

ஓபிஎஸ் பேசியபோது நிதியமைச்சர் அவையிலிருந்து வெளியேறியது ஏன்? - சபாநாயகர் விளக்கம்

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு

சென்னை: எதிர்க்கட்சி துணைத் தலைவர் பேசுவதைக் கேட்ககூடாது என்று நிதியமைச்சர் வெளியே செல்லவில்லை. பணியின் நிமித்தமாகத்தான் அவர் வெளியே சென்றார் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 2022 23 பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. இன்று நிதித்துறை கோரிக்கைகளுக்கு நிதியமைச்சர் பதிலளிக்கிறார். இரண்டாவது நாளாக அதிமுகவினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். \

இதுதொடர்பாக பேரவைத் தலைவர் அப்பாவு சட்டப்பேரவையில் பேசுகையில், "இன்று காலையில் எதிர்கட்சியினரான அதிமுகவினர் வெளிநடப்பு செய்தபோது, நொண்டி சாக்கு என்றொரு வார்த்தையை பயன்படுத்தினேன், நானே அந்த வார்த்தையை திரும்ப பெற்றுக்கொள்கிறேன். அதே போன்று இன்று காலையிலே அதிமுகவினர், அவை கூடியதும், அனைவருமே நேரமில்லா நேரத்தில் பல கேள்விகளைக் கேட்க வேண்டும் எனக்கூறி, அதிமுகவின் கொறடா என்னுடைய அறையில் வந்து கேட்டுக்கொண்டதற்கிணங்க, அனைவரையும் கேள்வி கேடக் அனுமதித்து, அமைச்சர்கள் மூலம் தகுந்த பதிலை பெற்றுத்தந்தோம்.

அதன்பின்பு, நிதியமைச்சர் பதிலுரை ஆரம்பித்த பின்பு, அவர்கள் நேரமில்லா நேரத்தில் ஒதுக்கப்பட்டது போல ஒரு கேள்வியை கேட்க முற்பட்டார்கள் அது மரபல்ல என்பது அவர்களுக்கும் நன்றாக தெரியும். ஆகவே அதனடிப்படையில்தான் அவர்களுக்கு அது பற்றி பேச அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும், அமைச்சர்கள் பதிலுரைக்குப் பின்னர் நேரம் தருவதாகக் கூறினேன். இருந்தும், அவையிலிருந்து வெளிநடப்பு செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் அவர்கள் சென்றுள்ளனர் என்பதை இந்த அவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னொரு முக்கியமான காரணம், நேற்று எதிர்கட்சித் துணைத்தலைவர் பேசிக் கொண்டிருக்கும்போது, முதல்வரை நேரடியாக பார்த்து, நாங்கள் பேசி முடித்த பின்பு நிதியமைச்சர் நாளை வந்து பதில் சொன்னால் போதும் என்று கூறினார்கள். முதல்வரும் அதேபோல் நடந்துகொள்ள அறிவுறுத்தினார். இதனால், கடைசி இரண்டு நிமிடங்கள், பணியின் நிமித்தமாக நிதியமைச்சர் வெளியே சென்றிருக்கலாம். அந்த நேரத்தில் எதிர்கட்சித் துணைத்தலைவர் பேசும்போது, நிதியமைச்சர் இல்லை என்பதை ஒரு குற்றச்சாட்டாக கூறினார்கள்.

இது கூட்டுப் பொறுப்பு. முதல்வர் இங்கு இருக்கிறார், அமைச்சர்களும் இருந்திருக்கின்றனர். ஆகவே எதிர்கட்சி துணைத் தலைவர் பேசுவதைக் கேட்ககூடாது என்று நிதியமைச்சர் வெளியே செல்லவில்லை. பணியின் நிமித்தமாகத்தான் அவர் வெளியே சென்றார் என்பதை நானும் தெரிந்துகொண்டேன் என்பதை இந்த அவையில் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, நேரமில்லா நேரத்தில் தமிழக சட்டம், ஒழுங்கு பிரச்சினை குறித்து பேச அதிமுக அனுமதி கோரியது. அனுமதி மறுக்கப்பட்டதால் அவையிலிருந்து அதிமுகவினர் வெளியேறினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவையில் இருந்து வெளியேறினார். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். அதிமுக ஆட்சிக்காலத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் 97% நிறைவேற்றப்பட்டு விட்டன. ஆனால் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தவறான தகவல்களைத் தெரிவித்திருக்கிறார்.

திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். அந்த 208 வாக்குறுதிகளில் பல சின்னச் சின்ன வாக்குறுதிகள். அப்படிப் பார்த்தால் அதிமுக ஆட்சியில் இதுபோன்ற நிறைய வாக்குறுதிகளை நாங்கள் செய்திருக்கிறோம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x