Published : 24 Mar 2022 10:55 AM
Last Updated : 24 Mar 2022 10:55 AM
சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி சட்டப்பேரவையிலிருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் 2022 23 பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. இன்று நிதித்துறை கோரிக்கைகளுக்கு நிதியமைச்சர் பதிலளிக்கிறார்.
இந்நிலையில், நேரமில்லா நேரத்தில் தமிழக சட்டம், ஒழுங்கு பிரச்சினை குறித்து பேச அதிமுக அனுமதி கோரியது. அனுமதி மறுக்கப்பட்டதால் அவையிலிருந்து அதிமுகவினர் வெளியேறினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவையில் இருந்து வெளியேறினார். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். அதிமுக ஆட்சிக்காலத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் 97% நிறைவேற்றப்பட்டு விட்டன. ஆனால் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தவறான தகவல்களைத் தெரிவித்திருக்கிறார்.
திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். அந்த 208 வாக்குறுதிகளில் பல சின்னச் சின்ன வாக்குறுதிகள். அப்படிப் பார்த்தால் அதிமுக ஆட்சியில் இதுபோன்ற நிறைய வாக்குறுதிகளை நாங்கள் செய்திருக்கிறோம்" என்றார்.
முன்னதாக நேற்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான இபிஎஸ், "திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்கதையாக உள்ளது. இதுபோன்றகுற்றங்களை காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் கேட்டுள்ளோம். கடந்த 15 நாட்களுக்கு முன்பு சென்னையில் 3 ஆயிரம் ரவுடிகள் இருப்பதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். ரவுடிகள் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர். இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எப்படி உள்ளது என்பதை இது காட்டுகிறது. இதற்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். திமுக ஆட்சியில்சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை " என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.
முன்னதாக விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது குறித்து பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "விருதுநகரில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு, விரைந்து தண்டனை பெற்றுத் தருவதில் நாட்டிற்கே முன்மாதிரி வழக்காக இருக்கும். பொள்ளாச்சி பாலியல் வழக்குபோல் இல்லாமல், வண்ணாரப்பேட்டை 13 வயது சிறுமி பாலியல் வன்முறை வழக்குபோல் இல்லாமல், இந்த வழக்கு நிச்சயம் முறையாக நடத்தப்படும்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் அதிமுக சட்டம், ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து அவையில் இருந்து வெளியேறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT