Last Updated : 24 Mar, 2022 06:53 AM

 

Published : 24 Mar 2022 06:53 AM
Last Updated : 24 Mar 2022 06:53 AM

குடும்பத்துடன் உடல் தானம் செய்ய விண்ணப்பித்த ஆர்டிஓ

ஜே.கே.பாஸ்கரன்

கோவை: விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலராக (ஆர்டிஓ) பணிபுரிந்து வருபவர் ஜே.கே.பாஸ்கரன். இவரது மனைவி பி.ஜமுனா, மகன் நிர்மல், மகள் நித்யா, மருமகன் சிபி குணேசகரன் ஆகிய அனைவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு தங்கள் உடல் உறுப்புகளை தானம்செய்ய ஒப்புதல் அளித்து அடையாள அட்டையை பெற்றுள்ளனர்.

இதுதொடர்பாக ஜே.கே.பாஸ்கரன் கூறும்போது, “ஒவ்வொரு ஆண்டும் எனது மகனின் பிறந்தநாள் அன்று குடும்பத்துடன் ரத்ததானம் செய்துவிடுவோம். தொடர்ந்து அவ்வாறு 23 முறை ரத்த தானம் செய்துள்ளோம். இந்த முறை மகனின் பிறந்தநாளன்று ஏதேனும் ஒரு அரசுமருத்துவமனைக்கு உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புதல் அளிக்க திட்டமிட்டிருந்தோம். அதன்படி இறந்தபிறகு கோவை அரசு மருத்துவமனையில் உடல் உறுப்புகள் தானம் செய்ய விண்ணப்பம் அளித்து அடையாள அட்டையை பெற்றுள்ளோம்.

குடும்பத்தில் அனைவரும் தானம்

இதன்மூலம், இறந்த பிறகு எந்தெந்த உடல் உறுப்புகளை மற்றவர்களுக்கு பயன்படுத்த முடியுமோ அவர்களுக்கு பயன்படும். குடும்பத்தில் யாராவது ஒருவர் உடல் தானத்துக்கு ஒப்புதல் அளித்திருந்தால் மற்றவர்களுக்கு தெரியாமல் போக வாய்ப்புள்ளது. எங்கள் குடும்பத்தில் அனைவரும் உடல் தானம் செய்ய ஒப்புதல் அளித்திருப்பதால் அனைவருக்கும் இது தெரியும். இதன்மூலம், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்பட்டால் உடல் உறுப்புகள் உடனடியாக தானம் அளிக்கப்படும். இதுபோன்று பலரும் தானம் செய்ய முன்வர வேண்டும். அதோடு மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

கோவை அரசு மருத்துவமனையின் டீன் டாக்டர் நிர்மலா கூறியதாவது:

தானம் செய்வது எப்படி?

தங்கள் உடலை தானம் செய்ய விரும்புவோர் மருத்துவமனையின் உடற்கூறியல் துறை அல்லது இருப்பிட மருத்துவர் (ஆர்எம்ஓ) அலுவலகத்துக்கு வந்து விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். அதை பூர்த்தி செய்து உடற்கூறியல் துறையில் தானம் செய்ய பதிவு செய்ய வேண்டும். அவர்கள் ஒரு பதிவு எண்ைண அளிப்பார்கள். உடல் தானம் அளிப்பவர்கள் தங்களின் இந்த விருப்பத்தையும், பதிவு எண்ணையும் உறவினர்களிடம் கட்டாயம் தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான் உரிய காலத்தில் உடலை பெற முடியும். டோனர் அட்டையை பெற்றவர்கள் அந்த அட்டையை எப்போதும் தங்களுடன் வைத்திருக்க வேண்டும்” என்றார்.

உடலை தானம் செய்ய, மருத்துவமனை உடற்கூறியல் துறை (அ) இருப்பிட மருத்துவர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து உடற்கூறியல் துறையில் பதிவு செய்ய வேண்டும். அவர்கள் பதிவெண் அளிப்பார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x