Last Updated : 23 Mar, 2022 02:32 PM

 

Published : 23 Mar 2022 02:32 PM
Last Updated : 23 Mar 2022 02:32 PM

முல்லைப் பெரியாறு | உச்ச நீதிமன்ற மனுவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: பிரதமர் அலுவகத்திடம் தமிழக விவசாயிகள் மனு

பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக பி.ஆர்.பாண்டியன்.

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது எனவும், வலுகுறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை திரும்பப் பெற எனவும், பிரதமர் மோடியிடம் தமிழக விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் இன்று டெல்லியில் அவரது அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் 2 கோடி மக்களுடைய குடிநீர் உள்ளிட்ட வாழ்வாதாரமாக முல்லைப் பெரியாறு அணை விளங்குகிறது. இந்நிலையில், கேரளாவில் தனது அரசியல் அதிகாரப் போட்டிக்காக காங்கிரஸ் கட்சியும் கேரளாவில் ஆளக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும். புதிய அணை கட்டி தமிழகத்திற்கு செல்லக்கூடிய தண்ணீரை தடுக்க வேண்டும் என்கிற புத்தியோடு செயல்பட்டு வருகிறார்கள்.

அணை வலுவாக உள்ளது என்கிறது ஆய்வுக்குழு: உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழு கடந்த பிப்ரவரி மாதம் வரையிலும் அணையை மாதம் ஒரு முறை செய்யும் ஆய்வில் அணை வலுவாக இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, 142 கனஅடி கொள்ளளவில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நான்கு ஆண்டுகள் 6முறை முழுமையாக நிரப்பப்பட்டு பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. 2021ஆம் ஆண்டு கேரள அரசும் காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து அணையில் 142 அடி தண்ணீர் தேக்கக் கூடாது என்ற உள்நோக்கத்தோடு மறைமுக நடவடிக்கையில் ஈடுபட்டது. அணை குறித்து விஷமப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர். உச்ச நீதிமன்றத்தில் கேரளா அரசால் தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணையில் ஆதாரத்துடன் ஆய்வு குழு அணை வலுவாக இருக்கிறது என்பதை எடுத்துரைத்தது. இறுதிக்கட்டமாக, ரூல் கர்வ் என்கிற நீர் பராமரிப்பு முறையை சொல்லி உச்ச நீதிமன்றத்தில் நவம்பர் மாதம் வரை 138 அடி மட்டும் தேக்கிவைக்க கேரளம் அனுமதி பெற்று விட்டது. தொடர்ந்து டிசம்பர் மாதம் முதல் 142 கனஅடி தண்ணீர் தேக்கப்பட்டு பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

எம்.ஜி.ஆரால் மறுசீரமைக்கப்பட்ட முல்லைப் பெரியாறு: இந்நிலையில், ஆய்வுக்குழு திடீர் என தனது நிலையை மாற்றிக் கொண்டு பிப்ரவரி மாதம் இறுதியில் அணையை மறுஆய்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருக்கிறது. அதனை பின்பற்றி மத்திய அரசின் ஜல்சக்தி துறையும் மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருக்கிறது. இது தமிழகத்தின் விரோதமான நடவடிக்கை மட்டுமின்றி உள்நோக்கம் கொண்டதுமாகும். வன்மையாக கண்டிக்கத்தக்கது, மட்டுமல்ல ஆய்வுக்குழு, மத்திய அரசு மீதும் அச்சமும், சந்தேகமும் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே முன்னாள் முதல்வர் எம்.ஜி.ரால் உலகப் புகழ்மிக்க பொறியாளர்களை கொண்டு நவீன முறையில் கேப்பிங், ஆங்கரிங், சப்போர்ட்டிங் என்கிற மூன்று வித தொழில்நுட்ப முறையில் அணை மறுசீரமைக்கப்பட்டது.

இதில், நூறு ஆண்டுகளுக்கு மேல் அணை வலுவாக இருக்கும் என்பதை உறுதிபட நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆய்வு குழு மற்றும் மத்திய ஜல்சக்தி துறை மனுக்களை திரும்பப் பெற வேண்டும். இதன்மூலம், தமிழக முல்லைப் பெரியாறு உரிமையை மீட்டுத்தர பிரதமர் அவசரமாக தலையிட வேண்டும். மேலும், அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை பாதுகாப்பு வழங்கிட வேண்டும். அணைக்கு தமிழகத்தின் பொறியாளர்களும் சென்றுவர தமிழன்னை படகுக்கு அனுமதி வழங்கி அவர்களுக்கு உரிய பாதுகாப்பையும் வழங்கிட வேண்டும். 152 அடி கொள்ளளவு உயர்த்திட பேபி அணையை பலப்படுத்த அனுமதி தருவதோடு, கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல சாலை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். மும்முனை மின்சார இணைப்பு வழங்கிட வேண்டும்.'' இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்: இதுகுறித்து பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், ”மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளேன். பிரதமர் உரிய நடவடிக்கை மேற்கொள்வார் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. தொடர்ந்து உரிமைக்கான போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். முல்லைப் பெரியாறு விவசாயிகளை ஒன்றிணைத்து தீவிரமான போராட்டத்தில் களம் இறங்கி இருக்கிறோம்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x