Published : 07 Apr 2016 03:45 PM
Last Updated : 07 Apr 2016 03:45 PM
திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 8 தொகுதிகளுக்கு இம்முறை புதுமுக வேட்பாளர்களை அதிமுக களமிறக்கியிருக்கிறது. தற்போதைய எம்.எல்.ஏ.க்களில் நயினார் நாகேந்திரன் மட்டுமே திருநெல்வேலி தொகுதிக்கு மீண்டும் நிறுத்தப்பட்டிருக்கிறார்.
சங்கரன்கோவில் தொகுதிக்கு ராஜலட்சுமி, வாசுதேவநல்லூருக்கு அ. மனோகரன், தென்காசிக்கு செல்வமோகன்தாஸ், ஆலங்குளத்துக்கு எப்சி கார்த்திகேயன், நாங்குநேரிக்கு மா. விஜயகுமார், ராதாபுரத்துக்கு லாரன்ஸ், பாளையங்கோட்டைக்கு தமிழ்மகன் உசேன் ஆகிய 7 தொகுதிகளுக்கும் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள் அனைவரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு புதுமுகங்கள். இதுபோல் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சிக்கு கடையநல்லூர் தொகுதியை ஒதுக்கி, அத் தொகுதிக்கு நிறுத்தப்பட்டுள்ள ஷேக் தாவூதும் இத் தொகுதிக்கு புதுமுக வேட்பாளர்.
மீண்டும் வாய்ப்பு
திருநெல்வேலி தொகுதியில் நயினார்நாகேந்திரனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே கட்சி நிகழ்ச்சிகளில் ஓரங்கட்டப்பட்டுவந்த அவருக்கு இம்முறை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்று பரவலாக பேசப்பட்டுவந்தது. இந்நிலையில் இத்தொகுதியில் எதிரணி வேட்பாளர்களுக்கு கடும் போட்டியளிக்கும் வகையில் அவரையே மீண்டும் களத்தில் நிறுத்த அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது.
மின்துறை, தொழில்துறை அமைச்சராக அவர் பதவி வகித்துள்ளார். கடந்த 2011 தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றிருந்தார். இவர் திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ். லட்சுமணனைவிட 38,491 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டபோதெல்லாம் நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று பேசப்பட்டது. ஆனால் கடைசிவரை அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. தற்போது தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
வாய்ப்பை இழந்தவர்கள்
வாசுதேவநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ டாக்டர் எஸ். துரையப்பா, ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ பி. ஜி. ராஜேந்திரன், அம்பாசமுத்திரம் தொகுதி இ. சுப்பையா ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. தென்காசி தொகுதியில் கடந்தமுறை போட்டியிட்ட ஆர். சரத்குமாருக்கு இம்முறை திருச்செந்தூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதால் இத்தொகுதியில் இம்முறை புதிய வேட்பாளர் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.வாக இருந்து பின்னர் அதிமுகவுடன் நெருக்கமாக இருந்த எஸ். மைக்கேல்ராயப்பன் மீண்டும் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
நாங்குநேரி தொகுதியில் கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் ஏ. நாராயணன் வெற்றி பெற்றிருந்தார். சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து சமீபத்தில் பிரிந்து சமத்துவ மக்கள் கழகத்தை தொடங்கிய அவருக்கு அதிமுக கூட்டணியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படட்து. ஆனால், அவர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை.
கடையநல்லூர் தொகுதியில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பி. செந்தூர்பாண்டியனின் வாரிசுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. இத் தொகுதியை கூட்டணி கட்சிக்கு முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கியிருக்கிறார்.
கடந்த 2012-ம் ஆண்டு சங்கரன்கோவிலில் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முத்துச்செல்விக்கும் இம்முறை போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக தற்போதைய சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
அம்பாசமுத்திரம் தொகுதி
அம்பாசமுத்திரம் தொகுதியில் கடந்த 1991 முதல் 1996 வரை சட்டப்பேரவை உறுப்பினராக முருகையாபாண்டியன் இருந்துள்ளார். 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட இவர் தோல்வி அடைந்திருந்தார். தற்போது மீண்டும் அவர் இத் தொகுதியில் போட்டியிடுகிறார்.பாளையங்கோட்டை தொகுதியில் போட்டியிட அதிமுகவிலுள்ள உள்ளூர் பிரமுகர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படாமல் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்மகன் உசேனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. முஸ்லிம் சமுதாயத்தினரின் வாக்குவங்கியை குறிவைத்தே அவர் இத் தொகுதியில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT