Published : 29 Apr 2016 01:37 PM
Last Updated : 29 Apr 2016 01:37 PM
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் கோடை வெயிலை விஞ்சும் அளவுக்கு சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், நெடுஞ்சாலைகளில் நடைபெறும் அரசியல் கட்சித் தலைவர்களது பிரச்சாரம் போக்குவரத்தை முடக்கி வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இதை தேர்தல் அதிகாரிகளும், காவல்துறையும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
சமீபத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் வேனில் பயணம் செய்து பிரச்சாரம் செய்தார். 3 நாட்களாக நடைபெற்ற இப்பயணம் முழுவதும் நெடுஞ்சாலைகளிலேயே இருந்தது. களியக்காவிளை தொடங்கி ஆரல்வாய்மொழி வரையிலும், அங்கிருந்து வள்ளியூர், நாங்குநேரி, திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், பாளையங்கோட்டை, மேலப்பாளையம், அம்பாசமுத்திரம், தென்காசி, சங்கரன்கோவில் என்று முக்கிய இடங்களுக்கு ஸ்டாலினும், திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களும், திமுக நிர்வாகிகளும் கார்களில் அணிவகுத்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
முக்கிய இடங்களில் நெடுஞ்சாலைகளை மறித்தே பிரச்சாரம் நடைபெற்றது. முற்றிலுமாக போக்குவரத்து முடங்கியது. மார்த்தாண்டத்தில் பிரச்சாரம் செய்தபோது கன்னியாகுமரி - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் வாகனங்கள் செல்லமுடியாமல் முடங்கின. இதனால் வாகனங்களில் இருந்தவர்கள் அவதிப்பட்டனர். முக்கிய சாலைகளை மறித்து பிரச்சாரம் செய்ததால் 3 நாட்களில் மாலை, இரவு வேளைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபோலவே மற்ற கட்சித் தலைவர்களின் வேன் பிரச்சாரமும் நெடுஞ்சாலைகளை வழிமறித்து நடைபெற்று வருகின்றன.
தொண்டர்களும் காரணம்
தலைவர்கள் பிரச்சாரம் செய்ய அடையாளம் காணப்படும் இடங்களில் பிரச்சாரத்துக்கு சில மணி நேரத்துக்கு முன்னதாக கூட்டத்தை கூட்டி வைத்தும், செண்டை மேளம், ஒலிபெருக்கி முழக்கம் என்று களேபரமாக்குவதால் அவ்வழியாக போக்குவரத்து பாதிப்பை தவிர்க்க முடியாமல் ஆகிவிடுகிறது. எவ்வளவுதான் போலீஸாரும் கூட்டத்தை கட்டுப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முயற்சித்தாலும் கடைசியில் வேனில் தலைவர்கள் வந்ததும் தொண்டர்கள் சாலையை மறித்து சூழ்ந்துகொள்கிறார்கள். தலைவர் பிரச்சாரம் செய்துவிட்டு பல நிமிடங்களுக்கு பின்னரே அவ்வழியாக போக்குவரத்து சீராகிறது.
கண்டுகொள்ளாத அதிகாரிகள்
இவ்வாறு போக்குவரத்தை முடக்கும் விவகாரத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பெரிதாக கண்டுகொண்டதாக தெரியவில்லை. பிரச்சாரத்துக்கு அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுக்கும் இடம் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் முக்கிய சாலைகளாக இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இனிவரும் நாட்களிலாவது நெடுஞ்சாலைகளை மறித்து போக்குவரத்தை முடக்கி அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சாரம் செய்வதற்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் அனுமதிக்க கூடாது என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்துகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT