Published : 22 Mar 2022 08:55 PM
Last Updated : 22 Mar 2022 08:55 PM
மதுரை: தமிழகத்தில் காவல் நிலைய சிசிடிவி கேமரா பதிவுகளை ஓர் ஆண்டு அல்லது 18 மாதங்கள் வரை சேமித்து வைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் வடமதுரையைச் சேர்ந்த சரவணன் பாலகுருசாமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், வடமதுரை காவல் ஆய்வாளர் கருப்பசாமி, சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்கள் ராஜகணேஷ், தங்கபாண்டி ஆகியோர் எனக்கு எதிராக மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவு: விசாரணையின்போது போலீஸாரின் மனித உரிமை மீறலுக்கு ஆதாரமாக வடமதுரை காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில் காவல் நிலைய சிசிடிவி பதிவுகள் 30 நாட்களுக்கு மேல் தானாக அழிந்துவிடும், இதனால் சிசிடிவி காட்சிகளை தற்போது எடுக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது. சமீபகாலங்களில் அரசு ஊழியர்கள் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக பல வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. இதனால் ஆவணங்கள், ஆதாரங்கள் இல்லாமல் மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக உத்தரவிட முடியாது.
அதே நேரத்தில் காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை 18 மாதங்கள் வரை பாதுகாக்க வேண்டும் என ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதையும், அந்த கேமராக்கள் நல்ல நிலையில் இயங்குவதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
எனவே, தமிழகத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பதிவுகளை குறைந்தபட்சம் ஒரு ஆண்டு அல்லது 18 மாதங்கள் வரை பாதுகாப்பாக வைப்பதையும், அதற்கு ஏற்ப சிசிடிவி கேமரா பதிவுகளை சேமிக்கும் வசதியை 3 மாதங்களில் ஏற்படுத்துவதையும் உள்துறை செயலரும், டிஜிபியும் உறுதி செய்ய வேண்டும்.
காவல் நிலையங்களில் சிசிடிவி காட்சிகளை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகள் எடுக்கவும், அந்த நடவடிக்கைகளில் சுணக்கம் காட்டும் அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுப்பதையும் டிஜிபி உறுதிப்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT