Published : 22 Mar 2022 07:58 PM
Last Updated : 22 Mar 2022 07:58 PM
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவடைந்தது. இரண்டு நாட்களில் அவரிடம் நடத்தப்பட்ட 9 மணி நேர விசாரணையில் 165 கேள்விகள் கேட்கப்பட்டன.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி விசாரணை ஆணையத்தின் முன் நேற்று (மார்ச் 21) இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதையடுத்து இரண்டாவது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இதன்படி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். காலையில் நடந்த விசாரணையின்போது, ஆணையத்தின் சார்பில், "இடைத் தேர்தலையொட்டி அந்தப் படிவங்களில் ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டது தெரியுமா?" என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், "திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும்.
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரது உடல்நலம் குறித்து சசிகலா என்னிடம் ஓரிரு முறை ஜெயலலிதா நன்றாக இருப்பதாகக் கூறினார். இந்த தகவல் குறித்து நான் சக அமைச்சர்களிடம் மட்டுமே கூறினேன். பொதுவெளியில் இதுதொடர்பாக நான் பேசவில்லை. அரசாங்கப் பணி தொடர்பாக ஜெயலலிதா கூறியதாக சசிகலா எந்தவொரு தகவலையும் என்னிடம் தெரிவிக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்பட்டது என்பது குறித்து எனக்குத் தெரியாது” என்று கூறியிருந்தார்.
மேலும், "2016 டிசம்பர் 5-ம் தேதி இறப்பதற்கு முன்பாக ஜெயலலிதாவை நான் உட்பட அமைச்சர்கள் 3 பேர் அவரை நேரில் பார்த்தோம். உயிர்காக்கும் கருவியாக இருக்கக்கூடிய எக்மோ கருவியை ஜெயலலிதாவின் உடலில் இருந்து அகற்றுவதற்கு முன் அவரை நேரில் பார்த்தேன்.
அதற்கு முந்தைய நாளான டிசம்பர் 4-ம் தேதி ஆளுநர் அப்போலோ மருத்துவமனைக்கு வந்திருந்தபோது, ஜெயலலிதாவை சந்திக்காமல், பிரதாப் ரெட்டியை மட்டும் சந்தித்தது குறித்து எனக்கு எதுவும் நினைவில்லை. அன்றைய தினம் ஜெயலலிதா இதயத் துடிப்பு செயலிழந்த நிலையில், மீண்டும் இதயத் துடிப்பைத் தூண்டும் CPR சிகிச்சை அளித்தது குறித்து எனக்கு தெரியாது.
ஆனால், அன்று மாலை எக்மோ கருவி பொருத்தப்பட்டது குறித்து அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என்னிடம் கூறினார். அவர் இறப்பதற்கு முன்பாக மூத்த அமைச்சர்கள் 3 பேருடன் நான் அவரை நேரில் பார்த்தேன்" என்று கூறியுள்ளார்.
அப்போலோ நிர்வாகம் எதிர்ப்பு: மருத்துவ ரீதியாக ஜெயலலிதாவுக்கு என்ன சிகிச்சைகள் அளிக்கப்பட்டது என்பது குறித்து தனக்கு தெரியாது என்று ஓ.பன்னீர்செல்வம் நேற்று தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இரண்டாவது நாளான இன்றும் அவரிடம் மருத்துவக் குறிப்புகள் சார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு அப்போலோ மருத்துவமனை சார்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். "நேற்றே மருத்துவ சிகிச்சை தொடர்பாக அவர் எதுவும் தெரியாது எனக் கூறிவிட்டதால், மீண்டும் அதுதொடர்பான கேள்விகளைக் கேட்க வேண்டாம்" எனக் கூறினர். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வத்திடம் மருத்துவம் சார்ந்த கேள்விகள் கேட்கப்படவில்லை.
பின்னர் சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஓ.பன்னீர்செல்வத்திடம் குறுக்கு விசாரணை நடத்தினார்.
கேள்வி: "ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா மீதான குற்றச்சாட்டு களைய வேண்டும் என்பதற்காகத்தான் ஆணையம் அமைக்கப்பட்டது என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நீங்கள் பேட்டி அளித்திருந்தது சரியா?"
ஓபிஎஸ் பதில்: "சரிதான்"
கேள்வி: "விசாரணை ஆணையத்தின் முன் ஆஜராகி நான்கரை மணி வாக்குமூலம் அளித்த பிறகு உங்களுக்கு ஜெயலலிதா மரணம் குறித்து தனிப்பட்ட முறையில் சந்தேகம் உள்ளதா?"
ஓபிஎஸ் பதில்: "ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. பொதுமக்களின் கருத்து வலுத்ததால்தான், மக்களின் எண்ணத்தை நான் பிரதிபலித்தேன். ஆணையம்தான் ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் சந்தேகங்களைக் களைய வேண்டும்."
கேள்வி: "ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை கேட்டது நீங்கள்தான், அரசாணை பிறப்பித்ததும் நீங்கள்தான், தற்போது விசாரணைக்கும் வந்துள்ளீர்கள்?"
ஓபிஎஸ் பதில்: "துணை முதல்வர் என்ற அடிப்படையில் அதில் நான் கையெழுத்திட்டேன். ஆணையம் என்னை வரவழைத்ததால், 2 நாட்களாக ஆஜராகி பதிலளித்திருக்கிறேன்."
கேள்வி: "ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த காலகட்டத்தில், அவருக்கு அப்போலோ மருத்துவமனையில் என்ன சிகிச்சை கொடுக்கப்பட்டது என்பதை விசாரிக்கத்தான் ஆணையம் அமைக்கப்பட்டது என்பது சரிதானா?"
ஓபிஎஸ் பதில்: "சரிதான்."
கேள்வி: "சசிகலா மீது இப்போதும் தனிப்பட்ட முறையில் அபிமானமும், மரியாதையும் உள்ளதா?"
ஓபிஎஸ் பதில்: "சசிகலா மீது தனிப்பட்ட முறையில் மரியாதையும் அபிமானமும் இன்றுவரை உள்ளது."
கேள்வி: "விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது முதல் யாரிடம், என்னென்ன விசாரணை நடத்தப்பட்டது என்பது குறித்து தெரியுமா?"
ஓபிஎஸ் பதில்: "நான் தெரிவித்த பதில்கள் அனைத்தும் பத்திரிகைகளில் முழுமையாக வந்துள்ளது. இதற்குமுன் அப்படி வரவில்லை. இதுதொடர்பான முழுமையான விவரங்கள் எதுவும் எனக்கு தெரியாது."
கேள்வி: "இந்த ஆணையத்தின் முன் ஆஜராகியிருந்த 8 ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அளித்துள்ள சாட்சியத்தில், 2011-12 காலகட்டத்திலும் அதன் பின்னரும் சசிகலாவோ அவரது குடும்பத்தினரோ சதிதிட்டம் தீட்டியது இல்லை என்று கூறியுள்ளனரே, இது சரியா?”
ஓபிஎஸ் பதில்: "சாட்சியங்கள் அதிகாரிகள் ஆணையத்தில் கூறியது சரிதான். ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ, அவரது குடும்பத்தினரோ சதிதிட்டம் எதுவும் தீட்டவில்லை. 2014-ம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவுடன், அப்போது ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவரான வீரபெருமாள் என்பவரை அழைத்து என்னை அழைத்துவருமாறு கூறியுள்ளார்.
என்னிடம் இதுபோல தீர்ப்பு வந்துள்ளதாக கூறி, உடனடியாக சென்னைக்கு விரைந்து அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய பணிகளைச் செய்யவும், அமைச்சர்களைக் கூட்டி அடுத்த முதல்வரை தேர்வு செய்யும்படியும் ஜெயலலிதா கூறினார். அப்போது கண்கலங்கிய நிலையில் இருந்த என்னை, ’பன்னீர் அழுகாதீர்கள், இப்போதுதான் நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும்’ என்று ஜெயலலிதா கூறினார்."
இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்திடம் நடைபெற்ற விசாரணை முடிவுபெற்றது. இதில் மொத்தமாக அவரிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு, ஆறுமுகசாமி ஆணையத்தின் சார்பில் 120 கேள்விகள், சசிகலா தரப்பில் 34 கேள்விகள், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் 11 கேள்விகள் என மொத்தம் 165 கேள்விக்கள் கேட்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் கூறியது: "ஜெயலலிதாவின் மரணம் குறித்து அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட ஆணையத்தில் நேற்றும், இன்றும் ஆணையம் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதிலை நான் அளித்திருக்கிறேன். அதேபோல் எதிர் தரப்பில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நான் உரிய பதிலை தெரிவித்திருக்கிறேன். நேற்றும் இன்றும் காலை மாலை என 4 நேரங்களிலும் நடந்த விசாரணையில் உரிய பதிலை, உண்மையான பதிலை அளித்திருக்கிறேன்.
ஆணையம் அமைக்கப்பட்டு எனக்கு சம்மன் அனுப்பப்பட்ட விவரங்கள்: 12.12.2018-ல் சம்மன் அனுப்பி 20.12.2018-ல் விசாரணைக்கு ஆஜராக கூறப்பட்டிருந்தது. 26.12.2018 அன்று சம்மன் அனுப்பி 8.1.19 ஆஜராகுமாறு கூறப்பட்டிருந்தது. 11.1.19 அன்று சம்மன் அனுப்பி, 23.1.19 ஆஜராகுமாறு கூறப்பட்டிருந்தது. 22.1.19 சம்மன் அனுப்பி, 29.1.19 அன்று ஆஜராகும்படி கூறப்பட்டிருந்தது. 14.2.19 அன்று சம்மன் அனுப்பி, 19.2.19 அன்று ஆஜராகும்படி கூறப்பட்டிருந்தது. 25.2.19 சம்மன் அனுப்பி 28.2.19 ஆஜராகும்படி சம்மன் வரப்பெற்றது. 26.4.19 அனுப்பி வைக்கப்பட்ட சம்மனுக்கு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால தடை காரணமாக ஆஜராகவில்லை. எனவே 7 முறை, சம்மன் அனுப்பப்பட்டு, 6 முறை எனக்கு கடிதம் வரப்பெற்றது, இரண்டு முறை, 23.2.19 சொந்த காரணத்துக்காகவும், 19.2.2019 அன்று பட்ஜெட் இருந்த காரணத்தாலும், நான் ஆணையத்திற்கு வரமுடியாது என்று கடிதம் அனுப்பினேன். அதை ஆணையமும் ஏற்றுக்கொண்டது.
எனக்கு சம்மன் அனுப்பப்பட்டு 2 முறைதான் ஆணையத்தின் விசாரணைக்கு நான் ஆஜராகவில்லை. சில பத்ரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும், 8 முறை சம்மன் அனுப்பி நான் வரவில்லை என்ற கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.அதுமிகவும் தவறான கருத்து என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கும், இறப்பதற்கு முன்பாக எக்மோ கருவி அகற்றப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக, இடையில் 74 நாட்கள் நான் ஜெயலலிதாவை பார்க்கவில்லை. இதுதான் உண்மை. இதில் முரண்பாடான கருத்தே இல்லை.
பொதுமக்களின் கருத்தாக சந்தேகம் இருக்கிறது என்றுதான் முதன்முதலாக பேட்டி கொடுத்தேன். இந்த சந்தேகத்தைப் போக்குவதற்கு, சசிகலாவுக்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொண்டு, நிரூபித்தால் அவர் மேல் இருக்கிற குற்றச்சாட்டு நீக்கப்படும் என்ற கருத்தையும் நான் சொல்லியிருக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரையில், என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதிலை தந்திருக்கிறேன். தெரிந்த கேள்விகளுக்கு பதிலளித்தேன், தெரியாத கேள்விகளுக்கு தெரியாது என பதிலளித்தேன். ஆணையத்தின் விசாரணை எனக்கு முழு திருப்தியாகவும், நிறைவாகவும் இருக்கிறது. எனக்கு தனிப்பட்ட முறையில் சசிகலா மீது மரியாதையும், மதிப்பு உண்டு” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT