Published : 22 Mar 2022 05:59 AM
Last Updated : 22 Mar 2022 05:59 AM

சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.230 கோடியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை: மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை கிண்டி, கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். உடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள்.படம்: பு.க.பிரவீன்

சென்னை: கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.230 கோடியில் கட்டப்படவுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு, 2021-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும்ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் (கிங் இன்ஸ்டிடியூட்) ரூ.250 கோடிமதிப்பீட்டில் 500 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறி வித்தார்.

இதைத்தொடர்ந்து, சுகாதாரத் துறை சார்பில் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டுவதற்காக கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் 4.89 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.

இந்நிலையில், பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுப்பணித் துறைஅமைச்சர் எ.வ.வேலு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.கணபதி, ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலர் தயானந்த் கட்டாரியா, சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சிறப்புப் பணி அலுவலர் ப.செந்தில்குமார், மருத்துவக் கல்வி இயக்குநர் ஆர்.நாராயணபாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பன்னோக்கு மருத்துவமனை கட்ட ரூ.230 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தரைதளம் மற்றும்6 மேல் தளங்களுடன் 51,429 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்படவுள்ள இந்த மருத்துவமனையில் 1,000படுக்கைகள் அமையவுள்ளன.

இதயவியல் துறை, மூளை நரம்பியல் துறை, கதிர்வீச்சு மற்றும் குறுக்கீட்டு கதிர்வீச்சு துறை, குடல் மற்றும் இரைப்பை மருத்துவத் துறை, நோய் எதிர்ப்பு குருதியியல் துறை, புற்றுநோய் மருத்துவத் துறை, சிறுநீரக மருத்துவத் துறை ஆகிய மருத்துவ உயர் சிறப்பு பிரிவுகளும், இதயம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சைத் துறை, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை, ரத்தநாள அறுவை சிகிச்சைத் துறை, குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சைத் துறை, புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறை, சிறுநீரக அறுவை சிகிச்சைத் துறை ஆகிய அறுவை சிகிச்சை உயர் சிறப்பு பிரிவுகளும் அமைக்கப்பட உள்ளன.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை 500 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்படும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் அதிக அளவில் இடம் இருப்பதால் 1,000 படுக்கைகளுடன் மருத்துவமனை அமையவுள்ளது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x