Published : 22 Mar 2022 07:42 AM
Last Updated : 22 Mar 2022 07:42 AM
சென்னை: மத்தியில் காங்கிரஸ், பாஜக என எந்தகட்சி ஆட்சியில் இருந்தாலும், காவிரிவிவகாரத்தில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்கின்றன என்று அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டினார்.
மேகேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை முன்மொழிந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:
காவிரி போராட்டம் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான அவதாரத்தை இந்த பிரச்சினை எடுக்கிறது. இறுதியில், இவ்வளவுதான் தண்ணீர் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது. ஆனால்,நாங்கள் அணை கட்டுவோம் என்று அவர்கள் சொல்கின்றனர். குமரப்பா, குமாரசாமி, எடியூரப்பா, தேவகவுடா எல்லோரும் ஒரே அணியில் இருக்கின்றனர்.
அங்கு காங்கிரஸ், பாஜக என எந்த கட்சியாக இருந்தாலும், மாறுபட்ட கருத்துஇல்லாமல் ஒரே நிலையில் இருக்கின்றனர்.
இங்குகூட அதிமுக தீர்மானம் கொண்டுவந்தபோதெல்லாம் திமுக நிபந்தனையின்றி ஆதரித்தது. அதேபோல், நாங்கள் தீர்மானம் கொண்டுவந்தால் அவர்களும் ஆதரித்துள்ளனர். நமக்குள் ஆயிரம்இருக்கலாம். நானேகூட தவறு செய்துள்ளேன். இன்று எனக்கு பொறுப்பு வந்திருக்கலாம்.
தண்ணீருக்கு கையேந்தும் நிலை
தமிழகத்தில் பல ஆறுகள் ஓடினாலும் நாம் தண்ணீருக்கு கையேந்த வேண்டிய நிலையில்தான் உள்ளோம். தனி மனிதன் உச்ச நீதிமன்ற ஆணையை மதிக்காவிட்டால் சட்டம் சும்மாவிடுமா? அதை ஒரு மாநிலமே செய்யும்போது, ஏன் என்று கேட்கவேண்டாமா. இவர்களைப் போலதான்கேரளாவும் நடந்து கொள்கிறது.
மத்தியில் காங்கிரஸ் இருந்தாலும், கூட்டணியில் இருந்தாலும், இப்போதுள்ள கட்சியாக இருந்தாலும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்தான் நடக்கிறது. எனவே, சட்டப்படிதான் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்டை மாநிலத்துடன் நல்லுறவு பேணும் அதே நேரத்தில் நம் உரிமையை விட்டுக்கொடுக்க கூடாது. நடந்தவை நடந்ததாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லதாக இருக்க வேண்டும். தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, பேரவையில் உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பேசினர். பின்னர், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசியதாவது:
காவிரி பிரச்சினையில், தமிழகத்தின் நிலைப்பாட்டை பலமுறை எடுத்துரைத்தும் அதை கருத்தில் கொள்ளாமல் கர்நாடக அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வேதனை அளிக்கிறது. இது காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறும் செயலாகும்.
மக்களின் உரிமை பாதிக்கப்படும்
ஏற்கெனவே, உச்ச நீதிமன்றம் பெங்களூரு நகரின் குடிநீர் தேவை உள்ளிட்ட பிற பயன்பாடுகளுக்காக 14.75 டிஎம்சி நீரை கர்நாடகாவுக்கு அளித்துள்ளது. இந்நிலையில் மீண்டும் பெங்களூருவின் குடிநீர் தேவைக்கென 67 டிஎம்சியில் மேகேதாட்டு அணை கட்ட முயற்சிப்பது தமிழகத்தை பாலைவனமாக்கும் செயல். அணை கட்டப்பட்டால் தமிழக மக்களின் உரிமையும் கடுமையாக பாதிக்கப்படும்.
மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிகளை தடுக்க, தமிழக சட்டப்பேரவையில் ஏற்கெனவே 2 முறை அதிமுக சார்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
1986-ல் எம்ஜிஆரால் தொடங்கப்பட்டசட்டப் போராட்டம் முதல், காவிரி நடுவர்மன்றம் அமைத்தது, மத்திய அரசிதழில்வெளியிடச் செய்தது, காவிரி மேலாண்மைஆணையம், காவிரி நீர் ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை அமைக்க உச்ச நீதிமன்றத்தை நாடி இறுதி தீர்ப்பை பெற்றது, அதன்பிறகு காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க முனைப்புடன் பாடுபட்டது ஆகியவை அதிமுகவின் சாதனைகள்.
மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு தன்னிச்சையாக நிதி ஒதுக்கியது கண்டிக்கத்தக்கது. அதிமுக சார்பில்அரசின் தனி தீர்மானத்தை ஒருமனதாக ஆதரிக்கிறோம். அதேநேரம், 10 ஆண்டுகளாக பாஜக, காங்கிரஸ் ஆட்சியில் கூட்டணியில் இருந்த திமுக அப்போதே இதை தடுக்க முயற்சிக்கவில்லை என்பதுதான் எங்கள் ஒரே ஆதங்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT