Published : 22 Mar 2022 04:15 AM
Last Updated : 22 Mar 2022 04:15 AM

விவசாய நிலங்களில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு: கிருஷ்ணகிரியில் விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம்

ஓசூர், சூளகிரி பகுதியில் விவசாய நிலங்களில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் பாதிக்கப்படும் விவசாயிகள், கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் எதிரே மனுக் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில், விவசாய நிலங்களில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் பாதிக்கப்படும் விவசாயிகள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநில பொதுச் செயலாளர் சண்முகம், மாவட்ட செயலாளர்கள் சேகர், பிரகாஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். முன்னாள் எம்எல்ஏ. டில்லிபாபு தலைமை வகித்துப் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம் உத்தனப்பள்ளி பகுதியில், ஓசூர் 5-வது சிப்காட் வளாகம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்த வருவாய்த்துறை மூலம் தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். உத்தனப்பள்ளி, அயரனப்பள்ளி, நாகமங்கலம் ஆகிய ஊராட்சிகளில், 3 ஆயிரத்து 34 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வருவாய்த்துறை அதிகாரிகள் கிராமங்களுக்குச் சென்று பார்வையிட்டனர். 3 ஊராட்சிகளிலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்த திட்ட மிட்டுள்ளனர்.

இந்த 3 ஊராட்சிகளிலும், 1500 மின் இணைப்பு, 5 ஆயிரம் தென்னை மற்றும் மா மரங்கள், 25 கோழிப்பண்ணைகள், 50 பசுமை குடில்கள் 15-க்கும் மேற்பட்ட ஏரிகள், அதற்கான நீர் வழித்தடங்கள் அமைந்துள்ளன. சிப்காட் அமைக்க உள்ள இடத்தில் மூன்று போக சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதில் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3 ஆயிரம் குடியிருப்புகளும் உள்ளன. ஏற்கெனவே ஓசூரில் சிப்காட், 3 மற்றும் 4 அமைக்க நிலம் கையப்படுத்தியதில், 2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பயன்பாடின்றி உள்ளது.

எனவே வேளாண் நிலங்களில் சிப்காட் அமைக்க கையகப்படுத்தும் முயற்சியை அரசு முழுமையாக கைவிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பிய, 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தனித்தனியாக ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டியிடம் மனு அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x