Published : 16 Jan 2014 12:00 AM
Last Updated : 16 Jan 2014 12:00 AM

ஊழலற்ற கூட்டணி: மன சஞ்சலத்தில் விஜயகாந்த்!- கட்சிகளை விமர்சித்துப் பேச நிர்வாகிகளுக்குத் தடை

தேமுதிக தலைவர் விஜய காந்த்தை திமுக சார்பில் தயாநிதி மாறன் உள்ளிட்ட தி.மு.க.வின் முக்கிய தலைவர்கள் சந்தித்துப் பேசுகிறார்கள். ஒரு பக்கம் இது தொடர்ந்தாலும் ஊழலற்ற ஒரு கூட்டணியை தனது தலைமையில் உருவாக்க அமைதியாக காய் நகர்த்தி வருகிறார் விஜயகாந்த்.

திமுக தரப்பு எட்டு அல்லது ஒன்பது நாடாளுமன்ற தொகுதி மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி வரை அளிக்க முன்வருகிறது. தேமுதிக-வோ 12 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா தொகுதி எதிர்பார்க்கிறது.

இதுகுறித்து தேமுதிக முக்கிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், “2004-ம் ஆண்டு தேர்தலில் எங்களைவிட குறைவான ஓட்டு வங்கி கொண்ட பாமக-வுக்கு ஆறு நாடாளுமன்ற தொகுதிகளையும் ஒரு ராஜ்ய சபா தொகுதியையும் திமுக வழங்கியது. 2009 ஆண்டு தேர்தலில் மிகக் குறைந்த ஓட்டு வங்கி கொண்ட காங்கிரஸுக்கு 16 தொகுதிகளை வாரி வழங்கியது. அப்படி இருக்கும்போது எங்கள் தலைவர் அதைவிட குறைவாக தானே தொகுதிகளை கேட்கிறார். இப்போதைய நிலைமையில் எங்களைவிட பெரிய கட்சி என எதுவும் திமுக கூட்டணியில் இல்லை. அதனால்தான் தலைவர் எந்த முடிவும் எடுக்கவில்லை” என்றார்.

திமுக தரப்பிலோ, “தேமுதிக-வினர் தாங்கள் கடைசியாக எடுத்த 10.1 சதவீத ஓட்டு வங்கியை வைத்தே கூட்டணி பேசுகிறார்கள். குறிப்பிட்ட கட்சிக்கு எதிரான அலை உருவான சூழலில், இன்னொரு பெரிய கட்சியுடன் கூட்டணி வைத்தபோது கிடைத்த ஓட்டுக்கள் அவை. உண்மையான ஓட்டு வங்கி என்பது தனித்து நின்று எடுத்த கோர் (அடிப்படை) ஓட்டுக்கள்தான். அந்த வகையில் தேமுதிக-வுக்கு எட்டு சதவீதம்தான் ஓட்டு வங்கி. அதனால், திமுக அளிக்க முன்வந்திருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை மிக நியாயமானவை” என்கிறார்கள்.

திமுக-வுக்கு கொஞ்சமும் சளை க்காமல் பாஜக-வும் தேமுதிக-வை வளைக்க முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அக்கட்சியின் பொன்.ராதாகிருஷ்ணனும் காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியனும் விஜய காந்த்துடன் பேசி வருகின்றனர்.

பாஜக-வின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், “திமுக-வுடன் தேமுதிக கூட்டணி சேரும் என்பதெல்லாம் மீடியாக்களும் திமுக-வும் சேர்ந்து செய்த குழப்பங்களே. விஜயகாந்த்தை திமுக தலைவர்கள் சந்தித்து பேசியிருக்கலாம். ஆனால், விஜய காந்த் ஊழலற்ற கூட்டணி என்பதில் தெளிவாக இருக்கிறார். பிப்ரவரி 2-ம் தேதி நடக்கும் அக்கட்சியின் உளுந்தூர்பேட்டை மாநாட்டின் பிரதான கோஷமே ‘ஊழலுக்கு எதிராக ஒன்றுபடுவோம்’ என்பது தான். அப்படி இருக்கும் போது விஜயகாந்த் திமுக-வுடன் கூட்டணி சேரவே மாட்டார். மேலும், ஏற்கெனவே ஒரு திராவிட கட்சியுடன் கூட்டணி சேர்ந்த தற்கான வருத்தமே அவர் மனதை விட்டு அகலவில்லை. அதனால், மீண்டுமொரு முறை அந்தத் தவறை செய்ய மாட்டார்” என்றார்.

ஊழலற்ற கூட்டணி

இந்நிலையில்தான் விஜய காந்த்தின் நலம் விரும்பிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் ஊழலற்ற கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை விஜயகாந்திடம் தீவிரமாக வலியுறுத்தியுள்ளார்கள். ஏற்கெனவே திமுக-வா? பாஜக-வா? என்கிற சஞ்சலத்தில் இருந்த விஜயகாந்த்தை இது மேலும் யோசிக்க வைத்துள்ளது. மேலும், நாடு முழுவதும் ஊழலுக்கு எதிரான பேரலை உருவாகி வரும் நிலையில், ஊழலற்ற கூட்டணி என்கிற நிலைப்பாடு தங்களுக்கு சாதகமாக அமையும் என்றும் விஜயகாந்த் கருதுகிறார்.

எனவே, திமுக, பாஜக என்று இருதரப்பிலும் பேசி வந்தாலும் தேமுதிக இப்போதைக்கு உறுதி யாக எந்த முடிவையும் எடுக்க விரும்பவில்லை. அதனால், உளுந்தூர்பேட்டை மாநாடு உட்பட எந்த கூட்டத்திலும் எந்த பேட்டியிலும்கூட கூட்டணி குறித்து பேசவும் பிற கட்சிகளை குறித்து விமர்ச்சிக்கவும் தனது கட்சியினருக்கும் விஜயகாந்த் தடை விதித்துள்ளார்.

பாமக-வும் இணைந்தால்?

பாஜக, தனது கூட்டணியில் பாமக-வும் வேண்டும் என்று நினைக்கிறது. ஆனால், அதைவிட தேமுதிக வெகு முக்கியம் என்று கருதுகிறது. இக்கூட்டணிக்கு பாமக வருவதை விஜயகாந்த் விரும்பவில்லை என்றாலும், பெரிதாக எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஏனெனில் வட மாவட்டங்களில் பாமக-வும் தேமுதிக-வும் சம செல்வாக்கு கொண்டிருக்கும் நிலையில், பாமக தனித்துப் போட்டியிட்டால் அந்த ஓட்டுக்களால் தேமுதிக-வின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுவதுடன் அது இரு தரப்புக்குமே லாபம் இல்லை என்று விஜயகாந்த் கருதுகிறார்.

பாஜக-வுடன் கூட்டணியில் பாமக-வும் வரும் பட்சத்தில் விஜயகாந்த் வைக்கும் கோரிக்கை, ‘தொகுதி பங்கீட்டின்போது திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், வேலூர், தருமபுரி, ஆரணி, கள்ளக்குறிச்சி ஆகிய வட மாவட்ட தொகுதிகள் எங்களுக்கு வேண்டும்’ என்பதே. மேலும், இக்கூட்டணியில் தனக்கு 24 தொகுதிகள் வரை கிடைக்கும் என்று தேமுதிக கருதுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x