Published : 21 Mar 2022 06:18 PM
Last Updated : 21 Mar 2022 06:18 PM

தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றப்பட்டது ஏன்? - சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

சட்டப்பேரவையில் உரையாற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: "பெண்களுக்கு கல்விதான் நிரந்தர சொத்து என்பதால், தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றப்பட்டுள்ளது" என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டம் என்பதால்தான் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மாற்றப்பட்டுள்ளதாக மக்கள் சந்தேகிக்கின்றனர்" என கூறினார். இதற்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியது: "மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயரிலே நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருந்த திட்டம்தான் இந்தத் திருமண உதவித் திட்டம். அதைப் பற்றி நிதித் துறை அமைச்சர் மிக விளக்கமாக உங்களிடத்திலே குறிப்பிட்டிருக்கிறார். இருந்தாலும், அதையொட்டி நான் கொஞ்சம் அழுத்தம் தந்து, அதில் நீங்கள் தெளிவு பெற வேண்டும் என்பதற்காக, நீங்கள் மட்டுமல்ல; நாட்டு மக்களும் புரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக சில விளக்கங்களை மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன்.

1989-ல் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் என்ற பெயரிலே துவங்கப்பட்டபோது முதன்முதலில் 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. பிறகு, 2009 ஆம் ஆண்டில் அது 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது. முதலில், ஒருமுறை இந்தத் திருமண உதவித் திட்டத்தை நிறுத்திய அதிமுக அரசு, பின்னர் இதனுடைய முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, 17-5-2011-ல் ஆட்சிக்கு வந்தபோது, திருமண உதவியை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, தாலிக்குத் தங்கம் 4 கிராம் என்பதை 8 கிராம் என்ற நிலையிலே உயர்த்தி, அதை 2016-லிருந்து நிறைவேற்றிக் கொண்டிருந்தது.

அதிமுக ஆட்சியில் பெறப்பட்டு, நிலுவையில் உள்ள மனுக்கள் பற்றி இப்போது ஆய்வு செய்தபோது அதைத்தான் நிதி அமைச்சர் இங்கே சொன்னார். ஆய்வு செய்தபோது, 24.5 விழுக்காடு பயனாளிகள் மட்டுமே தகுதியான பயனாளிகள் என கண்டறியப்பட்டது. அது தவிர, மாநிலக் கணக்காய்வுத் தலைவரது அறிக்கையில், இந்தத் திட்டம் குறித்து பல்வேறு குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இத்திட்டப் பயனாளிகளுக்கு நிதியுதவி மற்றும் தங்க நாணயம் வழங்குவதில் முறைகேடுகள் செய்தவர்கள் மீது, இதுவரை 43 வழக்குகளை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பதிவு செய்து, 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதற்குமேல் இந்தத் திட்டத்தில் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற குளறுபடிகள், முறைகேடுகளை விளக்கிக் கூறி, திருமண உதவித் திட்டத்தை, தயவுசெய்து கொச்சைப்படுத்திட நான் விரும்பவில்லை.

அதே நேரத்தில், உயர்நிலைக் கல்வியில் பெண்கள் சேருவது 46 சதவிகிதம் மட்டுமே இருப்பதால், அதை சரிசெய்து, கல்வியே நிரந்தரச் சொத்து என்ற உயரிய நோக்கில்தான் “தாலிக்கு தங்கம் வழங்கக்கூடிய திட்டம்” “6 முதல் 12 ஆம் வகுப்புவரை உள்ள அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டமாக” மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

திருமண தகுதி வருவதற்கு முன்பே, ஒரு பெண்ணுக்குக் கல்வித் தகுதியை, கல்வி என்ற நிரந்தர சொத்தை வழங்க வேண்டும் என்ற பெண்ணுரிமை கொள்கையின் மறுவடிவம்தான் இந்த “நிதியுதவி வழங்கக்கூடிய திட்டம்”. இன்னொன்றையும் நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். திருமண உதவித் திட்டத்தின்கீழ், ஆண்டொன்றுக்கு சுமார் 1 லட்சம் பெண்கள் பயனடைந்தார்கள். ஆனால், இந்த “1,000” ரூபாய் கல்வி உதவித் திட்டத்தின்கீழ், வருடத்திற்கு 6 லட்சம் மாணவிகள் பயனடைவார்கள்.

சமூக நீதி, பெண் கல்வி, நிலைத்த நீண்ட பலன், நவீன சிந்தனை, இடைத்தரகர்கள் இன்றி மாணவிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் வரவு வைக்கப்படுவது என்பது ஒரு வெளிப்படையான, அதே சமயத்தில் பெண்கள் அதிக அளவில் கல்வித் தகுதி பெறுவதற்கு வித்திடக்கூடிய திட்டமாக இந்தத் திட்டம் அமைந்திருக்கிறது. எனவே, கட்சி பாகுபாடின்றி, வேறுபாடின்றி இந்தத் திட்டத்தை அனைவரும் வரவேற்க வேண்டும் என்று கேட்டு அமைகிறேன்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x