Published : 21 Mar 2022 04:24 PM
Last Updated : 21 Mar 2022 04:24 PM
மதுரை: பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி யுவராஜ் உட்பட 10 பேர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவுக்கு சிபிசிஐடி மற்றும் கோகுல்ராஜ் தாயார் ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். இவர் கடந்த 2015-ம் ஆண்டில் நாமக்கல் மாவட்டம் தொட்டிப்பாளையம் ரயில் தண்டவாளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில் வேறு சாதி பெண்ணை காதலித்ததால் கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக சேலம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் (35), அவரது கார் ஓட்டுநர் அருண் (22) உட்பட பலரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
முதலில் இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. சாட்சிகள் பலர் பிறழ்சாட்சியாக மாறிய நிலையில், விசாரணையை வேறு மாவட்டத்துக்கு மாற்றக் கோரி கோகுல்ராஜ் தாயார் சித்ரா, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்று, கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
மதுரை நீதிமன்றத்தில் விசாரணை முடிந்த நிலையில், யுவராஜ் உட்பட 10 பேருக்கு இறுதி மூச்சு இருக்கும் வரை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரியும், தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமீனில் விடுதலை செய்யக் கோரியும் யுவராஜ் உட்பட 10 பேரும் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களில், ’சிசிடிவி காட்சிகள், டிவி பேட்டி, தலைமறைவாக இருந்தது ஆகியவற்றின் அடிப்படையில் கீழமை நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. சிசிடிவி காட்சியில் கோகுல்ராஜ் கடத்தல், கொலை தொடர்பான பதிவுகள் இல்லை. இருப்பினும் அந்தக் காட்சியை அடிப்படையாகக் கொண்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதிகாரிகள், நிபுணர்களின் சாட்சிகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 10 பேரும் பல ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறோம். எனவே, மேல்முறையீடு மனு விசாரணை முடியும் வரை தண்டனையை நிறுத்திவைத்து ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. யுவராஜ் உள்ளிட்ட 10 பேரின் மேல்முறையீடு மனு தொடர்பாக சிபிசிஐடி மற்றும் கொலையான கோகுல்ராஜின் தாயார் சித்ரா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 11-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT