Published : 21 Mar 2022 01:01 PM
Last Updated : 21 Mar 2022 01:01 PM
சென்னை: கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்விதமான அனுமதியும் அளிக்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரைவயில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தீர்மானத்தை தாக்கல் செய்தார். இந்த தீர்மானத்துக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்த அடுத்து சட்டப்பேரவையில் இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேகதாது அணை தொடர்பாக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் முழு விவரம் இதோ...
காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், மாண்பமை உச்ச நீதிமன்றம் 16.02.2018 அன்று அளித்த தீர்ப்பையும் மதிக்காமலும், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் இசைவைப் பெறாமலும், மத்திய அரசின் எந்தவித அனுமதியை பெறாமலும். தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்குவதை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால் கர்நாடக அரசின் இச்செயலுக்கு தனது கடும் கண்டனத்தை இப்பேரவை தெரிவித்துக் கொள்கிறது.
மத்திய அரசு கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்திற்கு எவ்விதமான தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்வித அனுமதியும் அளிக்க கூடாது என மத்திய அரசை வலியுறுத்த இம்மாமன்றம் கேட்டுக் கொள்கிறது.
காவிரி நதிநீர்ப் பிரச்சினை ஒரு நீண்டகால பிரச்சினையாகும். இதற்கு தீர்வாக உச்ச நீதிமன்றம் 16.02.2018 அன்று வழங்கிய தீர்ப்பு செயலாக்கப்பட்டு வருகிறது. இப்பிரச்சினை இரு மாநிலங்களின் உணர்வுபூர்வமான பிரச்சினையாகும். ஆதலால் கர்நாடக அரசு மேகதாதுவிலோ அல்லது காவிரி படுகையில் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது எவ்வித புதிய நீர்த்தேக்க திட்டத்தை, மற்ற படுகை மாநிலங்களின் இசைவு இன்றியும், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமலும் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடக அரசிற்கு அறிவுறுத்துமாறு மத்திய அரசை இம்மாமன்றம் கேட்டுக் கொள்கிறது.
மாண்பமை உச்ச நீதிமன்றத்தின் 18.05.2018 ஆணையின்படி, அதன் 16.02.2018 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பினை செயல்படுத்த, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பாடத, அணையை மேகதாதுவில் கட்ட கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதற்கு அனுமதி அளிக்கவோ கூடாது என்று ஆணையத்தை இம்மாமன்றம் கேட்டுக் கொள்கிறது.
கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து தமிழக விவசாயிகள் நலனைப் பாதுகாத்திட தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது என்று தமிழக சட்டப்பேரைவயில் இன்று நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT