Published : 21 Mar 2022 12:01 PM
Last Updated : 21 Mar 2022 12:01 PM

மேகதாது அணைக்கு எதிராக தனித் தீர்மானம் நிறைவேற்றம்: அரசியல் கட்சிகளின் ஒற்றுமை கோரி அமைச்சர் துரைமுருகன் பேச்சு

கோப்புப் படம்

சென்னை: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரைவயில் இன்று (மார்ச் 21) தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தீர்மானத்தை தாக்கல் இன்று (திங்கட்கிழமை) செய்தார்.

தீர்மானத்தை தாக்கல் செய்த பிறகு துரைமுருகன் பேசுகையில், “ கர்நாடக அரசின் செயலுக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.மேகதாது அணை தொடர்பாக அதிமுக தீர்மானம் கொண்டு வந்தபோதுகூட திமுக எந்த வித நிபந்தனையுமின்றி அந்த தீர்மானத்தை ஆதரித்திருக்கிறது. அதே போலே திமுக கொண்டுவந்த நேரத்தில் அதிமுகவும் ஆதரித்திருக்கிறது.

நான் அனைவரையும் கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன். நான் 89-ல் இருந்து இந்த காவிரி பிரச்சினையில் இருப்பவன். என்னுடைய காலத்தில்தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி இப்பிரச்சனையை என்னிடம் ஒப்படைத்தார். நமக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடு இருக்கலாம், நமக்குள் சண்டை பிடிக்கலாம், யாராக இருந்தாலும், நான் உள்பட இந்த காவிரி பிரச்சினையில், திமுக அதிமுக என்ன செய்தது என விவாதிப்பதை விட்டுவிட வேண்டும் என பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

நம்முடைய மகன், பேரன் வரை காவிரி போராட்டம் முடியாதோ என்ற சந்தேகம் எழுகிறது. காவிரி பிரச்சனையில் கர்நாடகாவில் அரசியல் கட்சிகள் ஒற்றுமையாக இருக்கின்றன.தமிழகத்திலும் அரசியல் கட்சிகள் ஒற்றுமையாக இருக்கின்றனர். மத்தியில் யார் ஆட்சி செய்தாலும் தமிழகத்தை மாற்றந்தாய் மன நிலையில் நடத்துகின்றனர். தண்ணீருக்காக கையேந்த வேண்டிய நிலையில் உள்ளோம்.

உச்ச நீதிமன்றம் தீர்பளித்தப் பிறகும் மேகாதாது அணை கட்டுவோம் என்று கர்நாடகம் கூறுவது அடாவடித்தனமானது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பையே மதிக்க மாட்டோம் என்றால் கூட்டாச்சி தத்துவம் எங்கே உள்ளது. காவிரி விவகாரத்தில் தோற்றோம் என்றால் வருங்கால தலைமுறையினர் நம்மை சபிக்கும்” என்றார்.

பின்னர் அனைத்துக் கட்சியினரும் தங்களின் கருத்துகளை முன்வைத்துப் பேசினர். அனைத்துக் கட்சியினரின் ஆதாரவையும் அடுத்து மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x