Last Updated : 07 Apr, 2016 06:23 PM

 

Published : 07 Apr 2016 06:23 PM
Last Updated : 07 Apr 2016 06:23 PM

சென்டிமெண்ட் தொகுதியான ராமநாதபுரத்தை குறிவைக்கும் முஸ்லிம், காங்கிரஸ் கட்சிகள்

சென்டிமெண்ட் தொகுதியான ராமநாதபுரத்தை பெற முஸ்லிம் கட்சிகளும், காங்கிரஸும் குறி வைத்து முயற்சித்து வருகின்றன.

ராமநாதபுரம் சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெறும் கட்சியினரே தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பர் என்ற சென்டிமெண்ட் நீண்டகாலமாக இருந்து வருகிறது. 1952 முதல் 1967 காங்கிரஸ் ஆட்சி வரையும், அதன்பின்னர் 1967-ல் திமுக ஆட்சியை பிடித்து அண்ணாத்துரை முதல்வரானது, 1977 முதல் அதிமுக ஆட்சியை பிடித்து எம்ஜிஆர் முதல்வரானது, அதன்பின் 1989 முதல் 2011 வரை இத்தொகுதியில் யார் வெற்றி பெறுகின்றனரோ அந்த கட்சிதான் ஆட்சியைப் பிடித்துள்ள சென்டிமெண்ட் தொடர்ந்து நடை பெற்றுள்ளது.

தற்போது அதிமுக சார்பில் மருத்துவர் அணி மாநில துணைச் செயலாளராக உள்ள டாக்டர் மணிகண்டன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மண்ணின் மைந்தன் என்பதாலும், இவரது குடும்பம் அதிமுக பின்னணியில் உள்ளதாலும் கட்சியினரிடம் எதிர்ப்பலை தெரியவில்லை. ஆனால் எதிர்தரப்பான திமுக கூட்டணியில் இந்த தொகுதியை கைப்பற்றுவதில் கடும்போட்டி நிலவுகிறது.

தொடர்ந்து கடந்த 4 தேர்தல் களில் அதிமுக, திமுக மற்றும் இந்த கூட்டணியின் முஸ்லிம் வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர். அதனால் முஸ்லிம் ஆதரவு கட்சிகள் ராமநாதபுரம் தொகுதியை குறிவைக்கின்றன. குறிப்பாக திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ(சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆர் இந்தியா) ஆகியவை ராமநாதபுரம் தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என திமுகவிடம் போட்டி போட்டு கேட்டு வருகின்றன.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசும் கடந்த 2006-ல் இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 1952 முதல் 1967 வரை காங்கிரஸ் வேட்பாளர் சண்முக ராஜேஸ்வர சேதுபதி (சேதுபதி மன்னர்களின் வாரிசு) வெற்றி பெற்று எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் இருந்துள்ளார். அதனால் காங்கிரஸ் கட்சியும் ராமநாதபுரம் தொகுதியை பெற்றாக வேண்டும் என முயற்சிக்கிறது.

குறிப்பாக காங்கிரஸ் மாவட்டத் தலைவராக உள்ள குட்லக் ராஜேந்திரன் தனது குருவான திருநாவுக்கரசர் மூலம் இத்தொகுதியை பெற முயற்சிக்கிறார். மேலும் முஸ்லிம் வாக்குகள் கணிசமாக உள்ளதால் காங்கிரஸின் முன்னாள் எம்.பி. ஜே.எம்.ஆருணின் மகன் ஹசன் என்பவரும் இந்த தொகுதியை பெற பகீரதம் செய்கிறார். இதில் குட்லக் ராஜேந்திரன் மாவ ட்டத் தலைவரானது முதல் பல லட்சங்களை செலவழித்து கூட் டங்களை நடத்தியும் கட்சியினரை ஒருங்கிணைத்துள்ளார். அந்த வகையில் ராமநாதபுரம் தொகு தியை பிடிப்பதில் முழு முயற்சி எடுத்து வருகிறார்.

கடந்த 15 ஆண்டுகளாக திமுக தரப்பில் கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்கப்பட்டுவிட்டன. இந்த முறை திமுகவுக்கே ஒதுக்க வேண்டும் என திமுகவினர் தலைமையிடம் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.

தற்போது அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிட்டதால், திமுகவிலும் கூட்டணிக்கு ஒதுக்க ப்படாமல் திமுக வேட்பாளரே நிறுத்தவும் வாய்ப்பு உள்ளது என கட்சியினர் கூறிவருகின்றனர். சென்டிமெண்ட் தொகுதியான ராமநாதபுரம் திமுக கூட்டணியில் யாருக்கு கிடைக்கும் என்பது ஒரு சில நாட்களில் தெரிந்துவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x