Published : 21 Mar 2022 05:43 AM
Last Updated : 21 Mar 2022 05:43 AM
கும்பகோணம்: கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் உள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயில்108 திவ்ய தேசங்களில் சிறப்பு வாய்ந்தது. நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற இக்கோயிலில் இந்த ஆண்டு பங்குனிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க, கருடாழ்வார் படம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. கொடிமரம் அருகே உற்சவரான எண்ணப்பன் சுவாமி பூமிதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதில், பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, தினமும் காலை வெள்ளிப் பல்லக்கு, மாலை வாகன புறப்பாடு, இரவில் பெருமாள்- தாயார் திருப்பள்ளியறைக்கு திருக்கைத்தலத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும்.
கொடியேற்றத்தை தொடர்ந்து, நேற்று மாலை இந்திர விமானம், இன்று (மார்ச் 21) வெள்ளி சூரியபிரபை வாகனம், 22-ம் தேதி ஆதிசேட வாகனம், 23-ம் தேதி கருடவாகனம், 24-ம் தேதி அனுமந்த வாகனம், 25-ம் தேதி யானை வாகனம், 26-ம் தேதி புன்னை மர வாகனம், 27-ம் தேதி வெள்ளிக் குதிரை வாகனம் ஆகியவற்றில் பெருமாள் புறப்பாடு நடைபெற உள்ளது. மார்ச் 27-ம் தேதி காலை வெண்ணெய்த்தாழி அலங்காரம் நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் மார்ச் 28-ம்தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. அன்று காலை 10மணிக்கு ஒப்பிலியப்பன் மலராடை அணிவிப்பு திருக்காட்சி நடைபெறும். 29-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு மூலவர் திருமஞ்சனம், அன்று இரவு 8 மணிக்கு சப்தாவரணம், 30-ம் தேதி பகல் 12 மணிக்குமூலவர் திருமஞ்சனம், 31-ம் தேதிபகல் 12 மணிக்கு அன்னப் பெரும்படையல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. விழா ஏற்பாடுகளைகோயில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT