Published : 21 Mar 2022 06:44 AM
Last Updated : 21 Mar 2022 06:44 AM
மதுரை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 5 ஆண்டுகளில் ரூ.927 கோடி பயன்படுத்தப்படாமல் அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்துள்ளது.
2022- 2023 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைக்கு ரூ.4,281 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று ஆண்டுதோறும் அறிவிக்கப்படும் பட்ஜெட்டில் ஒவ்வொரு துறைக்கும் நிதி ஒதுக்கப்படுகிறது.
ஆனால் அவ்வாறு ஒதுக்கப்படும் நிதி முழுமையாக பயன்படுத்தப்பட்டு திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறதா என்பது மக்களுக்கு தெரிவிக்கப்படுவது இல்லை.
மதுரை ஊமச்சிக்குளத்தைச் சேர்ந்த கார்த்திக், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் கடந்த 2011-2012 முதல் 2020-2021 நிதி ஆண்டுகள் வரையிலான நிதி ஒதுக்கீடு மற்றும் செலவினங்களின் விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டிருந்தார்.
ரூ.15,192 கோடி ஒதுக்கீடு
அதில் கிடைத்த பதிலின்படி தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத் துறையில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.927 கோடி செலவு செய்யப்படாமல் அரசிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக கார்த்திக் கூறியதாவது: 2016-2017 முதல் 2020-2021 வரையிலான 5 ஆண்டுகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைக்கு தமிழக அரசு ரூ.15,192 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் ரூ.14,265 கோடி செலவிடப்பட்டுள்ளது. மீதம் உள்ள ரூ.927 கோடி பயன்படுத்தப்படாமல் அரசிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 2020-2021-ல் மட்டும் இத்துறைக்கு ரூ.3,552 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுஉள்ளது. அதில் திட்டங்களுக்கு செலவு செய்ததுபோக ரூ.249 கோடியே 67 லட்சம் பயன்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சாதி ரீதியான வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோர் உரிய நிவாரண நிதி கிடைக்காமல் பல ஆண்டுகளாக சிரமப்பட்டு வருகின்றனர். ஆதிதிராவிடர் மக்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு, குடியிருப்பு பகுதிகளில் ஏற்படுத்த வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளன.
இந்நிலையில், 5 ஆண்டுகளில் ரூ.927 கோடி நிதி பயன்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. நடப்பு நிதி ஆண்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.4,281 கோடியை முழுமையாக செலவிடப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், திருப்பி ஒப்படைக்கப்பட்ட ரூ.927 கோடியை மீண்டும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT