Published : 21 Mar 2022 06:13 AM
Last Updated : 21 Mar 2022 06:13 AM

குறட்டை விடுவதால் ஏற்படும் பாதிப்பை கண்டறிய கோவை அரசு மருத்துவமனையில் பரிசோதனை வசதி

கோவை

குறட்டை விடுவதால் ஏற்படும் பாதிப்பை கண்டறியும் ‘பாலிசோம்னா கிராபி’ எனப்படும் பரிசோதனை வசதி கோவை அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறியதாவது: உடல் பருமன் உள்ளவர்களுக்கு ஏற்படும் குறட்டை நோய் பாதிப்பை கண்டறிய இந்த பரிசோதனை உதவும். சென்னைக்கு அடுத்தபடியாக கோவை அரசு மருத்துவமனையில் ரூ.15 லட்சம் செலவில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவை ரோட்டரி சென்ட்ரல் டிரஸ்ட் அமைப்பினர் இந்த கருவியை மருத்துவமனைக்கு அளித்துள்ளனர்.

மருத்துவமனையின் நுரையீரல் பிரிவு தலைவர் கீர்த்திவாசன், மருத்துவர்கள் வாணி, அருண்சந்தர் ஆகியோரின் மேற்பார்வையில் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பொதுவாக உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்கு குறட்டை நோய் ஏற்பட்டு அதனால் இரவில் தூங்கும்போது ‘அப்னியா’ எனப்படும் மூச்சடைப்பு ஏற்படும். மேலும், இதனால், உடலில் அதிக ரத்த அழுத்தம், இருதய பாதிப்பு, தூக்கம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும்.

மேலும், இந்நோய் உள்ளவர்களுக்கு பகலில் அதிக தூக்கம், சோர்வு ஏற்படும். இதனால், அவர்கள் தினந்தோறும் மேற்கொள்ளும் வேலைகளை செய்வதில் சிரமம் ஏற்படும். வாகனம் ஓட்டும்போது அதிக தூக்கத்தால் விபத்து ஏற்படவும் வாயப்புகள் உள்ளன. எனவே, நோய் உள்ளவர்கள் பரிசோதனை மூலம் குறட்டை பிரச்சினையின் அளவை பரிசோதித்து தக்க சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். பிரச்சினை உள்ளவர்களை முதலில் பரிசோதித்து, அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து இரவில் அவர்கள் இயல்பாக தூங்கும்போது இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x