Published : 02 Apr 2016 03:10 PM
Last Updated : 02 Apr 2016 03:10 PM
பிரதான அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலையே வெளியிடாத நிலையில், கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் களம் சோர்ந்துகிடக்கிறது. எனினும், இதையே சாதகமாக்கி மாவட்டத்தின் மூலை, முடுக்குகள் வரை பயணித்து ஆதரவு திரட்டிக் கொண்டிருக்கின்றனர் குமரி மாவட்ட பாஜக வேட்பாளர்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கட்சிகள் மிகவும் வலுவாக உள்ளன. திமுக, அதிமுக, தமாகா, தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் இப்போது வேகமாக வளர்ந்து வருகின்றன. இப்போது வரும் சட்டப்பேரவைத் தேர்தலைக் குறி வைத்து அனைத்து அரசியல் கட்சிகளும் பணிகளை தொடங்கியுள்ளன. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே அனைத்து கட்சிகளும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழகங்கள் வரையில் கூட்டத்தை கூட்டின.
உறுதியற்ற நிலை
இப்போது பிரதான அரசியல் கட்சிகள் இதுவரை வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. பல கட்சிகளிடையே கூட்டணி குழப்பம், சீட் பங்கீடு ஆகியவையே இன்னும் முடியவில்லை. மேலும் முக்கிய கட்சிகளில் யாருக்கு சீட் கிடைக்கும் என்பதே உறுதியாக தெரியாத நிலையில், பிரதான கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் தொடங்கி, கடைக்கோடி தொண்டர்கள் வரை மிகுந்த குழப்பத்தில் உள்ளனர்.
திமுக காங். கூட்டணி
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை குமரி மாவட்டத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. இப்போது அதே அளவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படுமா என குழப்பத்தில் உள்ளனர். கிள்ளியூர், குளச்சல் தொகுதிகளை கேட்டுப் பெற திமுகவினரும் முட்டி மோதி வருகின்றனர். திமுகவை பொறுத்தவரை யார் வேட்பாளர் என்பதே புரியாத புதிராக உள்ளது.
அதை விட ஒருபடி மேலே போய், அதிமுக முகாமிலோ சிட்டிங் எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர், கட்சியின் சீனியர் நிர்வாகிகள் உள்ளிட்ட யாருமே நேர்காணலுக்கு அழைக்கப்படவில்லை. இது மூத்த நிர்வாகிகளை சோர்வடையச் செய்துள்ளது. தமாகாவும் கூட்டணி உறுதி செய்யப்படாத நிலையில் மதில் மேல் பூனையாக உள்ளது. மக்கள் நலக் கூட்டணி, தேமுதிகவிலும் வேட்பாளராக யாருமே அடையாளப்படுத்தப் படவில்லை. இந்த சூழ்நிலையில் பாஜக மட்டுமே இப்போது வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
தமிழக அளவில் கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் பாஜக வலுவாக உள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலிலும் இத்தொகுதியில் பாஜகவே வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போது பாஜக தனது வேட்பாளர்களை அறிவித்து விட்டதால், இப்போது அவர்கள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர். கிராமப் பகுதிகள், நகரப் பகுதிகளில் உள்ள முக்கிய பிரமுகர்கள், அனைத்து சமூகத்தினரின் டிரஸ்ட்கள் ஆகியோரை சந்தித்து, ஆதரவு திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பிரதான கட்சிகள் வேட்பாளர்களை இதுவரை அறிவிக்காததால் இப்போது தேர்தல் களத்தில் குமரி பாஜகவினர் ஒருபடி முன்னோக்கி நிற்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT