Published : 20 Mar 2022 04:15 AM
Last Updated : 20 Mar 2022 04:15 AM
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உரிய விலை கிடைக்காததால் 4 ஏக்கரில் விளைந்த தக்காளியை டிராக்டர் மூலம் நேற்று விவசாயி ஒருவர் அழித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில், பல்லடம், மடத்துக்குளம், உடுமலை, தாராபுரம், காங்கேயம், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் பரவலாக பயிரிடப்பட்டு வருகின்றன. சமீப காலமாக திருப்பூர் மாவட்டத்தில் தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு தக்காளி, வெங்காயத்தை தரையில் கொட்டி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 4 ஏக்கர் நிலத்தில் விளைந்த தக்காளியை உரிய விலை கிடைக்காததால் விவசாயி ஒருவர் டிராக்டர் மூலமாக அழித்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.
பல்லடம் அருகே உள்ள அல்லாளபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சிவக்குமார் (41). இவர்களது குடும்பம் 3 தலைமுறைகளாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறது. சிவக்குமார் அல்லாளபுரத்தில் தனது 4 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டிருந்தார். தற்போது தக்காளி நல்ல விளைச்சல் கண்டுள்ளது. ஆனால், தக்காளியின் விலை தற்போது பெரும் சரிவை சந்தித்துள்ளது. சில்லரை கடைகளில் கிலோ ரூ.10-க்கும், மொத்த விற்பனை அங்காடிகளில் அதற்கும் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தக்காளிகளைப் பறிக்க கூலி ஆட்களை நியமித்தால் நஷ்டம் ஏற்படும் எனக் கருதி, உரிய விலை கிடைக்காததால் டிராக்டர் மூலமாக தக்காளிகளை பயிர்களை அழித்தார்.
இது குறித்து விவசாயி சிவக்குமார் கூறியதாவது:
தக்காளி பயிரிட வேண்டும் என்றால் நாற்று ஒன்றுக்கு ரூ.1 ஆகிறது. நாற்று நடும் நபர்களுக்கு கூலி, சொட்டு நீர் போடுவதற்கான செலவு, உரம் மற்றும் அறுவடை செய்யும்போது ஆட்கள் கூலி, சந்தைக்கு கொண்டு செல்லும் செலவு என ஒரு ஏக்கருக்கு தக்காளி பயிரிட்டால் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் வரை செலவாகிறது. ஆனால், தற்போது 15 கிலோ தக்காளி கொண்ட ஒரு கூடை ரூ.60 முதல் ரூ.80 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. சராசரியாக ஒரு கிலோ ரூ.5-க்குதான் சந்தையில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால் தக்காளியை சந்தைக்கு கொண்டுசென்று விற்பனை செய்தால், போக்குவரத்துக்கு கூடுதல் செலவாகும் என்பதால் 4 ஏக்கரில் விளைந்த தக்காளியை அழித்து வருகிறேன்.
மத்திய, மாநில அரசுகள் விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து கொள்முதல் செய்தால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்காமல் போனாலும், கடும் நஷ்டத்தை சந்திப்பதை தவிர்க்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு இறுதியில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தக்காளி விலையானது கிலோவுக்கு ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment