Published : 20 Mar 2022 06:35 AM
Last Updated : 20 Mar 2022 06:35 AM
தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாய பிரதிநிதிகள் ஆதரவும், விமர்சனமும் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி: தனி பட்ஜெட் மூலம் வேளாண்மைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. தென்னை, மா, கொய்யா, வாழைஉள்ளிட்டவை பயிரிடும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில்புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தடுப்பணைகள் மற்றும் தூர்வாரும் பணிகளுக்கு ரூ. 1,245 கோடி ஒதுக்கிருப்பது, நீர்ப்பாசன பரப்பை அதிகப்படுத்த உதவியாக இருக்கும்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: வேளாண் துறையின் வளர்ச்சிக்கு ரூ 33,007 கோடி நிதி ஒதுக்கிருப்பது சிறப்பாகும். பல்வேறு முக்கியமான அறிவிப்புகள் தமிழகத்தில் வேளாண்துறை உச்சத்துக்குச் செல்ல வழிவகுக்கும். கடந்த ஆண்டு வேளாண்மைத் துறையில் அறிவித்த 86 திட்டங்களில் 80-களுக்கான அரசாணை வெளியிடப்பட்டு செயற்பாட்டுக்கு வந்துள்ளது.
பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி: பட்ஜெட்டில் சிறுதானிய சாகுபடி, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கச் சிறப்புத்திட்டங்கள், உழவர் சந்தைகள் மேம்பாடு ஆகிய செயல்படுத்தப்படும்என்று அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், வேளாண் விளைபொருட்களின் கொள்முதல் விலைகளை உயர்த்தவும், கட்டமைப்புகளை மேம்படுத்தவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு ஓரளவுக்கு ஆதரவு அளித்தாலும், விவசாயத்தையும், விவசாயிகளையும் மேம்படுத்துவதற்கு போதுமானதாக அமையவில்லை. இலவச மின்சாரம், சர்க்கரை ஆலை நவீன மயமாக்கல், மரம் வளர்ப்பு போன்ற திட்டத்துக்கு நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் இடம் பெறவில்லை.
விசிக தலைவர் திருமாவளவன்: வேளாண் பட்ஜெட் உணவுப் பாதுகாப்புக்கும், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கும், விவசாயிகளின் முன்னேற்றத்துக்கும் வழி வகுக்கிறது. உயர் மதிப்பு வேளாண் திட்டங்களில் ஆதிதிராவிடர் பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்குக் கூடுதலாக 20 சதவீதமானிய வழங்க ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. கரும்புக்கு டன் ஒன்றுக்குக் கூடுதல் விலை ரூ.195 கொடுத்ததுபோல, பல்வேறு பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையைத் தமிழக அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்:
விவசாயிகளுக்கு நேரடியாகப் பயன்தராத வெறும் அறிவிப்புகள் நிறைந்த பட்ஜெட்டாகவே இதுஅமைந்துள்ளது. நெல்லுக்கு ஆதார விலையைக் கூட்டியிருப்பதாகக் கூறும் திமுக அரசு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வீணாகும் நெல் குறித்து பேசவில்லை. தற்போது இயற்கை விவசாயத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.400 கோடியாவது முறையாகப் பயன்படுத்தவேண்டும். வேளாண் பட்டதாரிகள் தொழில் தொடங்க ரூ.1 லட்சம் என்ற அறிவிப்பு பாராட்டுக்குரியது. ஆனால், இது போதுமானதல்ல.
அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன்: இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது பாராட்டுக்குரியது. வேளாண் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கத்துடன் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தும் பட்ஜெட்டாக, தொலைநோக்குப் பார்வை கொண்ட பன்முகத் தன்மையுடன் கூடிய பட்ஜெட்டாக இருப்பதால் வரவேற்கிறோம்.
இந்திய கம்யூனிஸ்ட் சார்பிலான தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி: வேளாண் கடன் வழங்க ரூ.1.81 லட்சம் கோடி, பயிர்க் காப்பீடு திட்டத்துக்கு ரூ.2,339 கோடி, நீர்நிலைகளை தூர்வார 4,984 கி.மீ-க்கு ரூ.80 கோடி, விவசாயம் செய்யும் வேளாண் பட்டதாரி இளைஞர்களுக்கு தலாரூ.1 லட்சம் உதவி, திருவாரூர் மாவட்டத்தில் விவசாய விளைபொருட்களுக்கான தொழிற்பேட்டை என்பன போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.
அதேநேரத்தில், சிறுதானியங்களுக்கான அரசு உத்தரவாத கொள்முதல் மற்றும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மாநில அரசே காப்பீட்டு திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும். ஆண்டுதோறும் சாகுபடி முதலீட்டு மானியம் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். மாற்றுப் பயிர் சாகுபடிக்கு புதிய திட்டம், நிலத்தடி நீர் செறிவூட்டலுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு போன்ற எதிர்பார்ப்புகள் இருந்தன. இவற்றை எதிர்காலத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சுந்தர விமல்நாதன், அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் கோவிந்தராஜ், நசுவினி ஆறு படுக்கை அணை விவசாயிகள் மேம்பாட்டு சங்கத் தலைவர் வா.வீரசேனன், இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆகியோர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT