Published : 20 Mar 2022 04:30 AM
Last Updated : 20 Mar 2022 04:30 AM

தமிழக பட்ஜெட்டில் தீப்பெட்டி தொழிலுக்கான அறிவிப்புகள் இல்லை: உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் ஏமாற்றம்

கோவில்பட்டி

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தீப்பெட்டித் தொழிலுக்கான எந்தவித அறிவிப்பும் இடம்பெறாததால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதுகுறித்து, நேஷனல் சிறுதீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர் வி.எஸ்.சேதுரத்தினம் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தீப்பெட்டித் தொழில் குறித்து எந்தஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. மீன்பிடித் தொழில் வாரியம், கட்டுமானத் தொழில் வாரியம் இருப்பதுபோல், 5 லட்சம் தொழிலாளர்களுக்கு வாழ்வு தரும் தீப்பெட்டி தொழிலை பாதுகாக்கும் வகையில், தீப்பெட்டித் தொழில் நலவாரியம் அமைக்க வேண்டும்.

கோவில்பட்டியில் கடந்த 1965-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தொழிற்பேட்டையை விரிவாக்கம் செய்ய வேண்டும். தீப்பெட்டி தொழிலுக்குரிய மூலப்பொருளான பொட்டாசியம் குளோரேட், சல்பர் கொள்முதல் செய்வதற்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் நடைமுறையை மாற்றி, நிரந்தர சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீப்பெட்டி தொழிற்சாலை களுக்கு தடையில்லா இலவச மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். 2 ஆயிரம் சதுர அடிக்கு மேல் தீப்பெட்டி தொழிற்சாலைகள் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறும் நடைமுறையை மாற்றி, உள்ளாட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என தீப்பெட்டி தொழில் வளர்ச்சிக்காகவும், நன்மைக்காகவும் ஏராளமான கோரிக்கைளை அரசிடம் முன் வைத்திருந்தோம்.

ஆனால், பட்ஜெட்டில் தீப்பெட்டித் தொழிலுக்கான எந்தவொரு அறிவிப்பும் இடம்பெறாதது உற்பத்தியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தொடர்ந்து நடக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் துணை மானியக் கோரிக்கையின் போது எங்களது கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும் என எதிர்பார்க்கிறோம், என்றார் .

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x