Published : 05 Apr 2016 09:45 AM
Last Updated : 05 Apr 2016 09:45 AM
ஆர்.கே.நகர் (டாக்டர் ராதா கிருஷ்ணன் நகர்) தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் போட்டியிடுகிறார். முதல்வரை அமோக வெற்றி பெறச் செய்வோம் என்கின்றனர் அதிமுகவினர். இடைத்தேர்தலைப் போன்ற வெற்றியை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்கின்றனர் எதிர்க்கட்சியினர்.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்த சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதால் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார். பின்னர், ஆர்.கே.நகர் அதிமுக எம்எல்ஏ வெற்றிவேல் ராஜினாமா செய்த தால், அத்தொகுதியில் கடந்த ஆண்டு இடைத்தேர்தல் நடை பெற்றது. இதில், போட்டியிட்ட முதல்வர் ஜெயலலிதா, ஒரு லட் சத்து 50 ஆயிரத்து 722 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
இத்தொகுதியில், கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த ஜெயலலிதா, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார். இந்த நிலையில், இதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
``அடிப்படை வசதிகள் இன்னமும் முழுமையாக செய்து தரப்படவில்லை. சாலைகள், மழைநீர் கால்வாய், கழிவுநீர் கால்வாய் சரிவர பராமரிக்கப்படுவதில்லை. மாநகராட்சியோ, மாநில அரசோ விளையாட்டுத் திடல் அமைக்க வில்லை. சுடுகாட்டு வசதி கிடை யாது. கன்டெய்னர் லாரிகளால் ஏற்படும் போக்குவரத்துப் பிரச் சினையைத் தீர்க்க மாற்றுப் பாதை கோரிக்கை நிறைவேற்றப் படவில்லை'' என்பது ஆர்.கே.நகர் தொகுதியின் குறைகளாகப் பார்க்கப்படுகிறது.
இத்தொகுதியில் மீண்டும் முதல்வர் போட்டியிடுவது பற்றி பல்வேறு கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
வடசென்னை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பி.வெற்றி வேல்:
இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகளில் 90 சதவீத வாக்குகளை முதல்வர் பெறுவார். இத்தொகுதியில் முதல்வர் வெற்றி பெற்ற பிறகு ரூ.190 கோடியில் பணிகள் முடிந்துள்ளன. ரூ.110 கோடி மதிப்பிலான பணிகள் நடக்கின்றன. 7 ஆயிரம் எல்.இ.டி. பல்புகள் பொருத்தப்பட்டன, 2 மேம்பாலங்கள் திறப்பு, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐடிஐ திறப்பு போன்ற சாதனைகளால் இந்தமுறையும் முதல்வர் அமோக வெற்றி பெறுவார்.
ஆர்.கே.நகர் அதிமுக பகுதி செயலாளர் எஸ்.சந்தானம்:
இத்தொகுதியில் முதல்வர் செய்துள்ள பணிகளைப் பார்த்து திமுகவினரே அவருக்கு வாக்களிப்பார்கள்.
சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கே.சேகர் பாபு:
ஆர்.கே.நகர் தொகுதியில் திறக்கப்பட்ட மீனாம் பாள் நகர் மேம்பாலம், நேரு நகர்- எழில் நகர் இணைப்புப் பாலம் ஆகிய திட்டப் பணிகளின் 70 சதவீ தம் திமுக ஆட்சியிலே முடிந்து விட்டன. மீதப் பணிகளை இப் போது முடித்து பாலத்தை திறந் துள்ளனர். மக்களுக்கு பலன் அளிக்கும் பணியை யார் செய்தாலும் தடுக்காத ஆட்சி திமுக ஆட்சி. அதற்கு நேர்மாறானது அதிமுக ஆட்சி
ஆர்.கே.நகர் கிழக்குப் பகுதி திமுக செயலாளர் வெ.சுந்தர் ராஜன்:
முதல்வர் திறந்துவைத்த கல்லூரியானது பள்ளிக்கூடத் திலும், ஐடிஐ சத்துணவுக் கூடத்திலும் நடக்கிறது. அரசு நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் ஓட்டல், ஜவுளிக்கடை வேலைக்குத் தான் ஆள் எடுத்தனர். அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
ஆர்.கே.நகர். மேற்கு பகுதி திமுக செயலாளர் ஏ.டி.மணி:
இடைத்தேர்தலில் திமுக போட்டியிடவில்லை. அதனால், லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வென்றார். இத்தேர்தலில் அதுபோல நடக் காது. ஏன் பர்கூர் தொகுதியில் திமுக வேட்பாளரிடம் தோற்றது போல கூட நடக்கலாம்.
ஆர்.கே.நகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பகுதி செயலாளர் ஆர்.லோகநாதன்:
காரனேசன் நகர் மேம்பாலத்துக்கு அடிக்கல் நாட்டியதோடு சரி. எழில் நகர் (கொடுங்கையூர் குப்பை வளாகத்தின் ஒருபகுதி) குப்பை கொட்டும் இடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படாததால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மக்கள் பிரச்சினையாலும், எதிர்க் கட்சிகள் போட்டியாலும் கடந்த முறை பெற்றது போன்ற வெற்றி யை முதல்வர் பெற முடியாது.
பொது மக்கள் கருத்து
ஆர். ஆறுமுகம், கட்டுமானத் தொழிலாளி:
ஆர்.கே.நகர் தொகு திக்கு உட்பட்ட கொடுங்கையூர் அன்னை சத்யா நகரில் வசிக் கிறேன். எங்கள் பகுதியில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுவதை வரவேற்கிறேன். எனது ஆதரவு அவருக்குத்தான். அவர் எங்கள் தொகுதி எம்எல்ஏவாக வெற்றி பெற்ற பிறகு, எங்கள் பகுதியில் அம்மா உணவகம் திறந்துள்ளார். அது எங்களுக்கு பேருதவியாக உள்ளது. தற்போது பல பஸ்கள் இவ்வழியாக வந்து செல்கின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டுள்ளது. அதனால் எங்கள் வாக்குகளை அவருக்கு தான் அளிப்போம்.
எம்.அம்மு, தனியார் நிறுவன ஊழியர்:
நான் தண்டையார்பேட்டை துர்காதேவி நகர் பகுதியில் வசிக்கிறேன். முதல்வர் ஜெயலலிதா எங்கள் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது ஆட்சியில் கர்ப்பிணிகளுக்கு சத்துணவு, குழந்தை பெற்றவர்களுக்கு ரூ.12 ஆயிரம் மகப்பேறு நிதியுதவி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, திருமண நிதியுதவி போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி யுள்ளார். இந்த தொகுதியில் உள்ள ஒவ்வொருவரும், அவரது ஏதேனும் ஒரு திட்டத்தால் பயனடைந்திருப்பார்கள். அதனால் அவருக்குத்தான் நாங்கள் வாக்களிப்போம்.
ஜி.பாப்பாத்தி, ஆதரவற்ற விதவை:
நான் தண்டையார் பேட்டை துர்காதேவி நகர் பகுதி யில் வசிக்கிறேன். கடந்த இடைத் தேர்தலில் இங்கு ஜெயலலிதா போட்டியிடும்போது, இப்பகுதியில் வசிக்கும் மக்களை விட, அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வந்த கட்சியினரின் எண்ணிக்கை அதிகம். நாங்கள் வெள்ளத்தில் சிக்கியபோது, அதிமுகவினர் ஒருவரும் இப்பகுதிக்கு வரவில்லை. இப்பகுதியில் உள்ள இரு பள்ளிகளுக்கு அருகில் செயல்பட்டு வரும் இரு மதுக்கடைகளை அகற்றக் கோரி போராடியும், இதுவரை அகற்றப்படவில்லை. ஜெயலலிதா ஆட்சியில் மதுவும், திருட்டும் அதிகரித்துவிட்டது. விதவை ஓய்வூதியத்துக்கு விண்ணப் பித்தேன். இதுவரை கிடைக்க வில்லை. என்னை தொடர்ந்து அலைக்கழித்து வருகின்றனர். அதனால் நான் ஜெயலலிதாவுக்கு வாக்களிக்க மாட்டேன்.
என்.மனோன்மணி, இல்லத் தரசி:
நான் தண்டையார்பேட்டை வ.உ.சி.நகர் பகுதியில் வசிக்கிறேன். முதல்வர் ஜெயலலிதா மீண்டும் எங்கள் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதை தொலைக்காட்சியில் பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். இது எங்கள் தொகுதிக்கு கிடைத்த பெருமை. அவர் எங்கள் தொகுதி எம்எல்ஏ-வான பிறகு, இங்கு 24 மணி நேரமும் போலீஸார் ரோந்து சுற்றி வருகின்றனர். பெண்கள் இரவு நேரங்களில் அச்சமின்றி செல்ல முடிகிறது. எங்கள் பகுதிக்கு இப்போது தெரு விளக்குகள் சரியாக எரிகின்றன. எங்களை நம்பி போட்டியிடும் அவரை நாங்கள் நிச்சயம் வெற்றிபெறச் செய்வோம்.
ஜி.முத்துவேல், ரியல் எஸ்டேட் முகவர் :
நான் தண்டையார்பேட்டை, திலகர் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கிறேன். நாங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, நிவாரணப் பொருட்கள் முறையாக வழங்கப்பட்டன. இப்போது எங்கள் பகுதிக்கு சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. கை நீட்டும் இடங்களில் எல்லாம் ஏற்றிச் செல்கின்றனர். எங்கள் பகுதியில் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு உடனடியாக ரூ.12 ஆயிரம் மகப்பேறு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அதனால் எங்கள் பகுதி அனைவரின் வாக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தான்.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்த சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதால் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார். பின்னர், ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு, ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 722 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT