Published : 19 Mar 2022 06:57 PM
Last Updated : 19 Mar 2022 06:57 PM
சென்னை: மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவது போல, விவசாய வேலை இல்லாத மாதங்களில் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் திட்டம் ஒன்றை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்ற உணர்வோடு செயல்பட்டுவரும் தமிழக அரசின் 'வேளாண் நிதிநிலை அறிக்கை' உழவர் பெருமக்களை ஊக்குவிப்பதாக அமைந்திருக்கிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டி வரவேற்கிறோம்.
இந்தியாவில் உள்ள மாநிலங்கள் தமது பட்ஜெட்டில் சராசரியாக 6.3 விழுக்காடு நிதியை வேளாண் துறைக்கு ஒதுக்குகின்றன. ஆனால் திமுக தலைமையிலான தமிழக அரசு தேசிய சராசரியைவிடக் கூடுதலாக சுமார் 8% நிதியை ஒதுக்குகிறது. இந்த ஆண்டும் 33,007 கோடி ரூபாய் வேளாண் துறைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இது அதிமுக அரசு கடைசியாக ஒதுக்கிய தொகையைப் போல இருமடங்காகும். நானும் விவசாயி தான் என்று போலி வேடம் தரித்துக்கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியின்போது விவசாயிகள் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வந்தனர். அந்த நிலையை 10 மாதங்களில் மாற்றியமைத்து சாதனை படைத்திருக்கிறது திமுக அரசு. அதற்காக எமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் 'அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம்' 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3204 கிராம ஊராட்சிகளில் வளர்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக எழுபத்தி ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'மாநில வேளாண்மை மேம்பாட்டுத் திட்டம்' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்காக இந்த ஆண்டு 2546 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
இரண்டு 'சிறுதானிய சிறப்பு மண்டலங்கள்' 20 மாவட்டங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டிருக்கின்றன. சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிப்பதோடு அது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சிறுதானிய திருவிழாக்கள் நடத்துவது என்றும் அரசு அறிவித்திருக்கிறது. வேளாண்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒன்பது வகையான செயல்பாடுகளை அதில் இணைத்துள்ளனர்.
திண்டிவனம், தேனி, மணப்பாறை ஆகிய இடங்களில் மூன்று மிகப்பெரிய 'உணவு பூங்காக்கள்' அமைப்பதற்கான அறிவிப்பு அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். அதைப் பாராட்டி வரவேற்கிறோம்.
உழவர் சந்தைகளை உருவாக்கி நேரடியாக விவசாயிகள் தமது விளைபொருட்களை மக்களிடம் விற்பனை செய்து கூடுதல் லாபம் ஈட்டுவதற்கு கருணாநிதி முதல்வராக இருந்தபோது வழி அமைத்தார். அதைப் பின்தொடர்ந்து தேனி, கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மொத்த காய்கறி விற்பனை வளாகங்கள் அமைத்து அருகாமையில் உள்ள மாநில வியாபாரிகள் தமிழக விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்ய வசதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்றுக் கூடுதல் லாபம் பெற முடியும்.
80 கோடி ரூபாய் செலவில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 4964 கிலோ மீட்டர் நீளமுள்ள கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் நடத்தப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டிருக்கும் விவசாயத் தொழிலாளர்களைக் கொண்டு இந்தப் பணியைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
உயர் மதிப்பு வேளாண் திட்டங்களில் ஆதிதிராவிடர் பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்க 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதனையும் வரவேற்கிறோம்.
கூடுதலான நிலப்பரப்பில் விவசாயம் செய்து உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கடந்த 10 மாதங்களில் அதில் வியக்கத்தக்க வளர்ச்சியை திமுக அரசு கண்டிருக்கிறது. இதற்காக எமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
விவசாயத் தொழிலாளர்கள் பெரும்பாலான நாட்களில் வேலை இல்லாமல் தவிக்கிறார்கள். எனவே மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவது போல, விவசாய வேலை இல்லாத மாதங்களில் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் திட்டம் ஒன்றை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 100 நாட்களாக உள்ள வேலையை 150 நாட்களாக உயர்த்தி வழங்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. தமிழக அரசு தனது நிதியிலிருந்து இதற்காகக் கூடுதல் நிதி ஒதுக்கி 100 நாட்கள் என இருப்பதை 150 நாட்கள் ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராம வங்கிகள் மூலம் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு வேளாண் கடன்கள் வழங்கப்படுவதைத் தமிழ்நாடு அரசு கண்காணிக்கும் என்று இந்த நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. அவ்வாறு கண்காணிக்கும் போது ஆதிதிராவிட பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு உரிய அளவில் கடன் வழங்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மத்திய அரசின் தவறான கொள்கைகள் காரணமாக இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கரும்புக்கு டன் ஒன்றுக்குக் கூடுதல் விலை 195 ரூபாய் அறிவிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. மத்திய அரசு செய்யாவிட்டாலும் தமிழக அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை மேலும் சில பயிர்களுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
கடந்த அதிமுக அரசின் ஆட்சிக்காலத்தில் அவர்களது புதுடெல்லி எஜமானர்கள் சொன்னதற்கு ஏற்ப நில எடுப்புச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்தார்கள். அந்த சட்டத்தை 2013-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கொண்டு வந்த சட்டத்துக்கு ஏற்ப மீண்டும் இந்த அரசு மாற்றி அமைத்து உழவர்களின் உரிமைகளையும் உடைமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
நேற்று அறிவிக்கப்பட்ட பொது நிதிநிலை அறிக்கை தொழில் வளர்ச்சிக்கும் மனிதவள மேம்பாட்டு வளர்ச்சிக்கும் வழிகோலியுள்ளதென்றால், வேளாண் துறை நிதிநிலை அறிக்கை உணவுப் பாதுகாப்புக்கும், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கும், உழவர்களின் முன்னேற்றத்துக்கும் வழி வகுத்திருக்கிறது. இதனை விசிக சார்பில் மனமாரப் பாராட்டி வரவேற்கிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT