Last Updated : 19 Mar, 2022 05:07 PM

 

Published : 19 Mar 2022 05:07 PM
Last Updated : 19 Mar 2022 05:07 PM

32,500 சதுர அடியில் 400 கிலோ தானியங்களால் சிட்டுக்குருவி உருவப்படம்: புதுவை பொறியியல் மாணவர் சாதனை முயற்சி 

புதுச்சேரியில் 400 கிலோ தானியங்களைக் கொண்டு சிட்டுக்குருவியின் உருவப்படத்தை வரைந்த பொறியியல் மாணவர் வினோத்

புதுச்சேரி: புதுச்சேரியில் 32,500 சதுர அடியில் 400 கிலோ தானியங்களைக் கொண்டு சிட்டுக்குருவியின் பிரமாண்ட உருவப்படத்தை உருவாக்கி பொறியியல் மாணவர் ஒருவர் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.

புதுச்சேரி வில்லியனூர் பிள்ளையார்குப்பம் அருகே உள்ள கூனிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் (18). இவர் மதகடிப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இசிஇ முதலாமாண்டு படித்து வருகிறார். ஓவியத்தில் ஆர்வம் கொண்ட இவர், நாளை (மார்ச் 20) உலக சிட்டுக் குருவிகள் தினத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுதும் வகையில், புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் சேதிலால் அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் 32,500 சதுர அடியில் 400 கிலோ தானியங்களை கொண்டு 125 அடி அகலம், 260 அடி உயரம் கொண்ட பிரமாண்டமான சிட்டுக்குருவியின் உருவப்படத்தை உருவாக்கி சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதனை இன்று (மார்ச் 19) காலை தொடங்கி மாலையில் செய்து முடித்தார்.

முதலில் சிட்டுக்குருவியின் உருவப்படத்தை வரைந்து,பின்னர் அவற்றில் அரிசி, கோதுமை, உளுந்து, பச்சைப்பயறு ஆகிய தானியங்களைத் தூவி இந்த படத்தை உருவாக்கியுள்ளார். மாணவரின் இந்த முயற்சியை கலாம் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து, உலக சாதனை சான்றிதழ் வழங்கயிருக்கிறது. மாணவரின் இந்த சாதனை முயற்சிக்கான ஏற்பாடுகளை விழிகள் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை தலைவர் பிரேம்குமார் மற்றும் தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

இது குறித்து மாணவர் வினோத் கூறுகையில், ‘‘சிட்டுக்குருவிகள் கூடு இல்லாத வீடே இல்லை என்று சொல்லும் அளவு சிட்டுக்குருவிகள் இருந்தன. இப்போது சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து வருகிறது. தற்போது இந்த பறவைகளை பார்ப்பதே அரிதாகிவிட்டது. சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் நோக்கில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த சாதனை முயற்சியை மேற்கொண்டேன்.

சிட்டுக்குருவிக்கு உணவளிப்பதோடு, அதனை பாதுகாக்க வேண்டும். பறவைகள் இருந்தால் இயற்கை இருக்கும். இயற்கை இருந்தால் மனித இனமும் செழிப்படையும். ஆகவே, பறவை இனங்களை பாதுகாக்க ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும்.’’என்றார். மாணவரின் இந்த விழிப்புணர்வு சாதனை முயற்சி பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x