Published : 19 Mar 2022 04:16 PM
Last Updated : 19 Mar 2022 04:16 PM
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக அரசு இரண்டாவது முறையாக தாக்கல் செய்துள்ள முழுமையான வேளாண் நிதிநிலை அறிக்கை, வேளாண்மைத் துறையின் புரட்சிக்கு வழிகோலி உள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக அரசு இரண்டாவது முறையாக தாக்கல் செய்துள்ள முழுமையான வேளாண் நிதிநிலை அறிக்கை, வேளாண்மைத் துறையின் புரட்சிக்கு வழிகோலி உள்ளது. காவிரிப் படுகை மாவட்டங்களில் 4964 கி.மீ. நீளமுள்ள கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகளுக்கு ரூ 80 கோடி ஒதுக்கீடு. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்த ரூ 300 கோடி ஒதுக்கீடு. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ரூ 400 கோடி ஒதுக்கீடு. பயிர்க் காப்பீடு திட்டத்திற்கு ரூ 2339 கோடி ஒதுக்கீடு.
சிறு, குறு நடுத்தர தொழில்கள் மூலம் சிறிய விவசாயம் சார்ந்த தொழில்களைத் தொடங்க ரூ 1.5 கோடி வரை மூலதன மானியம் வழங்குதல். வேளாண் புத்தெழில் நிறுவனங்களில் வேளாண் வணிக ரீதியான முயற்சிகளுக்கு ரூ 10 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி வழங்குதல். வேளாண் சார்ந்த வாழ்வாதாரப் பணிகளுக்கு ரூ 42.07 கோடி ஒதுக்கீடு; கிராமங்களில் வீடுகளுக்கு இலவச தென்னங்கன்று வழங்க ரூ 300 கோடி ஒதுக்கீடு; ஒட்டுமொத்தமாக வேளாண்துறையின் வளர்ச்சிக்கு ரூ 33007.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பது சிறப்பாகும்.
வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராம வங்கிகள் மூலம் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ரூ 1,83,425 கோடி வேளாண் கடன் வழங்குவது கண்காணிக்கப்படும். திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு ஏற்ற விலையை உறுதி செய்யும் வகையில் விவசாயப் பொருட்களுக்கான தொழிற்பேட்டை அமைக்கப்படும்.
7500 ஏக்கரில் இயற்கை வேளாண் சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படும். எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் சூரியகாந்தி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கப்படும்.
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் துவரை உற்பத்தி மண்டலம் அமைக்கபப்டும். மயிலாடுதுறையில் ரூ 75 லட்சத்தில் மண் பரிசோதனைக் கூடம் அமைக்கப்படும். சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் இரண்டு மண்டலங்கள் உருவாக்கப்படும் போன்ற அறிவிப்புகள் தமிழகத்தில் வேளாண்துறை உச்சத்திற்கு செல்ல வழிவகுக்கும். கடந்த ஆண்டு வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 86 திட்டங்களில் 80 திட்டங்களுக்கான அரசாணை வெளியிடப்பட்டு செயற்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்தியாவிலேயே வேளாண் துறையில் தமிழகம் முதல் மாநிலமாக திகழ மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT