Published : 19 Mar 2022 05:46 AM
Last Updated : 19 Mar 2022 05:46 AM
சென்னை: சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. வரும் 24-ம் தேதி வரை பேரவைக் கூட்டம் நடக்கும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது.
2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். இதையடுத்து, பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. இதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர். பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து பேரவைத் தலைவர் பி.அப்பாவு கூறியதாவது: பேரவையில் 19-ம் தேதி (இன்று) தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும். தொடர்ந்து மார்ச் 21, 22, 23 ஆகிய மூன்று நாட்களும் பட்ஜெட் மீதான விவாதம் நடக்கும். 24-ம் தேதி நிதியமைச்சர், வேளாண்துறை அமைச்சர் ஆகியோர் பதிலுரை அளிப்பார்கள்.
துணை நிதிநிலை அறிக்கைகள், முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அன்றுடன் பேரவை தள்ளிவைக்கப்படும். துறை வாரியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம், அரசின் ஆலோசனையின் அடிப்படையில் நடக்கும். அதற்கான நேரத்தை அரசு முடிவெடுத்து வழிகாட்டுதல் அளிக்கும். 21, 22, 23 ஆகிய மூன்று நாட்களும் பேரவையில் கேள்வி நேரம் இடம்பெறும். 24-ம் தேதி கேள்வி நேரம் இல்லை.
இந்த கூட்டத்தொடரில் கேள்வி நேரமும் பட்ஜெட் மீதான நிதியமைச்சர், வேளாண் அமைச்சர் ஆகியோரின் பதிலுரைகளும் நேரடியாக ஒளிபரப்பப்படும். பிரதான எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்தது, அவர்கள் ஜனநாயக உரிமை. அவர்கள் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்று, அவை நடத்துவது குறித்து ஆலோசனை அளித்துள்ளனர். ஜனநாயக ரீதியில் கூட்டத்தொடர் நடைபெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மார்ச் 21-ம் தேதி சட்டப்பேரவை கூடியதும், முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும். அதைத் தொடர்ந்து, பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். பின்னர், பொது மற்றும் வேளாண் பட்ஜெட்கள் மீதான விவாதம் தொடங்கும்.
அதிமுக வெளிநடப்பு
இதனிடையே, பட்ஜெட் உரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவை நேற்று காலை கூடியதும், 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அவர் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கியதும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி எழுந்து, பேசுவதற்கு அனுமதி கோரினார். ஆனால், அவருக்குபேரவைத் தலைவர் அனுமதி அளிக்கவில்லை.
இதையடுத்து, பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவர்கள் வெளியே செல்லும்போது, ‘போடாதே போடாதே, பொய்வழக்கு போடாதே’ என்று கோஷமிட்டபடி சென்றனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் கடன் ரூ.4.85 லட்சம் கோடியாக இருந்தது. நாங்கள் வாங்கிய கடனை மூலதனத்துக்காக செலவிட்டோம். ஆனால்,2021-22-ல் மட்டும் திமுக அரசு ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி கடன் வாங்கியது. ஆனாலும், முக்கிய திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை.
அதிமுக ஆட்சியின்போது கரோனாவால் கடும் நிதிச்சுமை ஏற்பட்டது. ஆனால், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கரோனா ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு, இயல்புநிலை திரும்பிவிட்டது. இதனால் அரசுக்கு வருவாய் அதிகரித்துள்ளது. இவ்வாறு வருவாய் அதிகரிக்கும்போது கடன் குறைந்திருக்க வேண்டும். ஆனால், கடன் குறையவில்லை.
மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை, கல்விக் கடன் தள்ளுபடி, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
மக்கள் நலனில் அக்கறை கொண்ட யாராலும் இந்த பட்ஜெட்டை வரவேற்க முடியாது. முன்னாள் அமைச்சர்கள் மீது திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர். எதிர்க்கட்சியை ஒடுக்கும் பணியை விட்டுவிட்டு, ஆக்கப்பூர்வமான பணியில்திமுக ஈடுபட வேண்டும். அப்படி செய்தால்தான் அடுத்ததாக திமுக எதிர்க்கட்சியாக அமர முடியும். இவ்வாறு பழனிசாமி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT