Published : 26 Apr 2016 02:40 PM
Last Updated : 26 Apr 2016 02:40 PM

ஒட்டன்சத்திரத்தில் களம் இறங்கிய அதிமுக தொடர் தோல்வியை தவிர்க்குமா?

ஒட்டன்சத்திரம் தொகுதியில் கடந்த நான்கு தேர்தல்களில் போட்டியிட்ட அதிமுக இந்த முறையாவது தோல்வியை தவிர்க்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவைத் தொகுதியில் 1996, 2001, 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் திமுக தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. தென் மாவட்டங்களில் முழுமையாகத் தோல்வியை சந்தித்த தேர்தல்களில்கூட ஒட்டன்சத்திரம் தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

இதற்கு அத்தொகுதியின் எம்எல்ஏவாக உள்ள அர.சக்கரபாணியின் உழைப்பு, தொகுதி மக்களிடம் பழகும் விதம் தான் என்று கூறப்படுகிறது. தொகுதிக்குள் நடைபெறும் திருமணம், கோயில் விசேஷங்களுக்கு மக்கள் அழை ப்பு விடுகின்றனர். இவரும் தவறாது ஆஜராகி மக்களை சந்திக்கிறார். இந்த அணுகுமுறை தொகுதி மக்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. இது இவருக்கு பெரும் பலமாக உள்ளது..

சமீபத்தில் இவரது மகள் திருமணத்தின்போது தொகுதியில் மட்டும் ஒரு லட்சம் பத்திரிகைகள் வீடுவீடாகச் சென்று வெற்றிலை பாக்குடன் வழங்கப்பட்டது. இதில் பெரும்பாலோனார் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தொகுதி மக்களை இந்த அளவு கவர்ந்துள்ளவரை தோற்கடிக்க அதிமுக கடந்த தேர்தல்களில் கடும் முயற்சி மேற்கொண்டும் பலன் இல்லை. இதனால் இந்த தேர்தலில் இத்தொகுதியை தொடக்கத்தில் அதிமுக தனது கூட்டணிக் கட்சியான மனிதநேய ஜனநாயகக் கட்சிக்கு ஒதுக்கியது.

இக்கட்சி வேட்பாளர் ஹாரூன் ரசீது தேர்தல் அலுவலகம் திறந்து பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். வேட்பாளர் வெளியூரைச் சேர்ந்தவர், தொகுதிக்கு அறிமுகம் இல்லாதவர், முஸ்லிம் ஓட்டுக்களும் இத்தொகுதியில் அதிக ளவில் இல்லை என்பதால் முழுக்க முழுக்க அதிமுகவினரை சார்ந்தே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதற்கிடையில் தங்களுக்குப் போதிய ஆதரவு இல்லை என்பதை தெரிந்து கொண்ட மனிதநேய ஜனநாயகக் கட்சியினர் தொகுதியை மாற்றித்தரக் கோரி அதிமுக தலைமையிடம் முறையிட்டனர். இதையடுத்து தொகுதி மாற்றப்பட்டது.

இந் நிலையில், ஒட்டன்சத்திரம் தொகுதியில் அதிமுக மீண்டும் களம் இறங்கியுள்ளது. இத்தொகுதியில் தொடர் தோல்விகளைக் கண்ட அதிமுக மீண்டும் போட்டியிடுவதால் தொண்டர்களுக்கு எந்த உற்சா கமும் ஏற்படவில்லை. காரணம் தொகுதிக்குள் இருக்கும் கோஷ்டி பூசல் தான்.

தேர்தல் அறிவிப்புக்குப் பின் ஒன்றிய செயலாளராக இருந்த நல்லசாமியை மாற்றியது அதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இவரை சார்ந்தே தொகுதி அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அரசியல் செய்துள்ளனர். தற்போது பாலசுப்பிரமணியன் ஒன்றியச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டணிக் கட்சிக்குச் சென்று, தற்போது மீண்டும் அதிமுகவைச் சேர்ந்த தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர் கிட்டுச்சாமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது ஒட்டன்சத்திரம் பகுதி அதிமுகவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அக்கட்சியில் முதன் முறையாக தற்போது தான் தொப்பம்பட்டியைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சக்கரபாணியும் தொப்பம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்தவர் என்பதால் அப்பகுதி ஓட்டுக்களை இருவரும் பெற வாய்ப்புள்ளது.

ஒட்டன்சத்திரம் ஒன்றியத்துக்கு புதியவரான கிட்டுச்சாமியை ஒட்டன்சத்திரம் ஒன்றிய அதிமுகவினர் வழிநடத்திச் செல்வதில் தான் அவரது வெற்றி, தோல்வி உள்ளது. எளிதில் திமுக வெற்றி பெறும் என்ற நிலையில் இருந்த தொகுதியை தற்போது வேட்பாளர் மாற்றத்தால் போராடி வெற்றிபெறச் செய்யும் நிலைக்கு தள்ளியுள்ளனர் அதிமுகவினர் என்றுதான் சொல்ல வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x